Sunday, May 9, 2010

0

ஒட்டுக் கேட்பது ஒரு பிரச்னையா என்ன?

தங்களுடைய தொலைபேசி பேச்சுகளை ஒட்டு கேட்கிறார்களே என்று எந்த அரசியல் தலைவரும் வியப்போ, வேதனையோ, அதிர்ச்சியோ அடைவதற்கு ஏதும் இல்லை; உள்துறை அமைச்சகத்துக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்ட உளவுப்பிரிவுப் போலீஸôரிடம் "அரசியல் களத்தில் என்ன நடக்கிறது?' என்று அமைச்சர் கேட்கும்போது தகவல் அளிப்பதற்காகவே அவர்கள் இதைச் செய்ய நேர்கிறது.

அரசியல் தலைவர்களிடையே என்ன ரகசியப் பேச்சு நடக்கிறது என்பதை அறிய எத்தனையோ வழிமுறைகள் இருந்தாலும் நேரத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்தி இருந்த இடத்திலிருந்தே எல்லா தகவல்களையும் பெற இதைவிட எளிமையான வழி இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றே கூறிவிடலாம்.

ஏதோ ஒரு இடத்திலிருந்து நம்முடைய பேச்சுகள் ஒட்டுக் கேட்கப்படலாம் என்ற கவலையே இல்லாமல் அரசியல் தலைவர்கள் மனம்விட்டுப் பேசுவது நடக்கும்வரை இத்தகைய முயற்சிகளை உளவுத்துறையும் மேற்கொள்வதில் வியப்பு ஏதும் இருக்கப் போவதில்லை.

உள்நாட்டு, வெளிநாட்டு பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக மத்திய உள்துறை, பாதுகாப்புத்துறை (ராணுவம்), வெளியுறவுத்துறை போன்ற துறைகளுக்காக தகவல்களைச் சேகரித்து அவற்றை வகைப்படுத்தி, அவற்றிலிருந்து பெறப்படும் படிப்பினைகளைத் தொகுத்து ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் தருவதும், அவற்றுக்கு ஏற்ற நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூறுவதும் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள உளவு அமைப்புகளின் கடமையாகும்.

ரா என்று அழைக்கப்படும் ஆய்வு - பகுப்பாய்வுப் பிரிவு, ஐ.பி. என்று அழைக்கப்படும் இன்டலிஜென்ஸ் பீரோ, இ.டி. என்று அழைக்கப்படும் வருவாய்ப் புலனாய்வு அமல்பிரிவு இயக்ககம் ஆகிய அமைப்புகள்தான் ரகசியத் தகவல்களைத் திரட்டி அவற்றை முதலில் தங்களுக்குள் பரிமாறிக்கொள்கின்றன.

தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ.), உள்நாட்டு பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு, அரசியல் நடவடிக்கைகளுக்கான மத்திய அமைச்சரவைக் குழு என்று குறிப்பிட்ட பணிகளுக்கான உயர்நிலை குழுக்கள் தங்களுடைய கொள்கைகள், உத்திகள் தொடர்பாக ரகசியத் தகவல்களை இந்தப் புலனாய்வு அமைப்புகள் மூலம் பெறுகின்றன.

இந்த அமைப்புகள் அனைத்தும் சிறப்பாகச் செயல்படத் தேவையான, பொதுவான அம்சம் இவற்றின் செயல்பாடுகள் அனைத்துமே பரம ரகசியமாக இருக்க வேண்டும் என்பதாகும். இந்த அமைப்புகளே தாங்கள் திரட்டிய தகவல்களைக் கசியவிட்டும், வெளியேறவிட்டும் கவனக்குறைவாக நடந்துகொண்டால் அந்த அமைப்புகளின் செயல்பாட்டுக்கு அவை நல்லதல்ல. இப்போது ஆங்கில வாரப்பத்திரிகைக்கு தொலைபேசி ஒட்டுகேட்பு பற்றிய தகவல்கள் எப்படி கசிந்தன என்று விசாரித்து, ஆராய்ந்து பிறகு எதிர்காலத்தில் இப்படி கசியாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதுதான் புத்திசாலித்தனமான செயலாக இருக்கும்.

எந்த அமைப்பு முறையிலும் இப்படிச் சில புல்லுருவிகள் இருந்து ரகசியத் தகவல்களை வெளியே கொடுத்துக் கொண்டிருக்க முயலும் என்பதால் ஆட்சியாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். ஆனால் இப்போது கசியவிடப்பட்ட தகவல்கள் திட்டமிட்டே, குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகக் கசியவிடப்பட்டவை என்று தெரிகிறது. அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வருவதற்கு முன்னால் இதைப்பற்றி நிறைய ஆராய வேண்டியிருக்கிறது.

ஓட்டு கேட்பதற்கான தொழில்நுட்பம் இப்போது மிகவும் நவீனமடைந்துவிட்டது; அரசு அமைப்புகளிலேயே சுமார் 12-க்கும் மேற்பட்டவை இதை சர்வ சாதாரணமாகக் கையாண்டு வருகின்றன. பெரிய தொழில் நிறுவனங்களை எடுத்துக் கொண்டாலும் 12-க்கும் மேற்பட்டவை இதைத் தங்களுடைய தொழிலில் உள்ள போட்டியாளர்கள் என்ன திட்டமிடுகிறார்கள், என்ன செய்யப் போகிறார்கள் என்பதை அறிய பயன்படுத்துகின்றன. அப்படி கிடைக்கும் தகவல்களில் சிலவற்றை மட்டும், தங்களுக்கு உதவிகரமாக இருக்கும் அரசியல்வாதிகளின் கவனங்களுக்கும் கொண்டு செல்கின்றனர். எனவே யார் ஒட்டு கேட்டார்கள், எதற்காகக் கேட்டார்கள், எந்தத் தகவலை யார் எவரிடம் சொன்னார்கள் என்றெல்லாம் அறிவதும் விசாரிப்பதும் சிக்கலான பணி.

அதே சமயம் இப்படித் தொலைபேசி பேச்சுகளை ஒட்டுக் கேட்டதால்தான் எல்லைப்புறங்களில் பல சந்தர்ப்பங்களில் எதிரிகளின் ஊடுருவலை முறியடிக்க முடிந்தது, எல்லைக்கு அப்பாலிருந்து கடத்தி கொண்டுவரப்பட்ட ஆயுதங்களையும் வெடிகுண்டுகûளையும் போதைப் பொருளையும் போலி கரன்சி நோட்டுகளையும் கண்டுபிடித்து கைப்பற்ற முடிந்தது. ஏன் சில சந்தர்ப்பங்களில் பயங்கரவாதிகளின் நாச வேலைகளைக் கூட நடத்த முடியாமல் தடுக்க முடிந்திருக்கிறது; ஆனால் அவற்றையெல்லாம் விரிவாக இல்லை - சுருக்கமாகக் கூட வெளியில் சொல்லிக்கொள்ள முடிந்ததில்லை. இத்தகைய தகவல்களையெல்லாம் பெற்றுத்தர தனிப்பட்ட முகமைகளையோ, குற்றப்பின்னணி உள்ள அமைப்புகளையோ நாம் பயன்படுத்த முடியாது. இப்போதைக்கு தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரமானது தெரிவிப்பதைவிட மறைப்பதே அதிகம் என்ற அச்சமே எனக்குள் ஏற்படுகிறது.

ஒட்டுகேட்பு விவகாரம் வெளிப்படுத்தப்பட்ட நேரம் முக்கியத்துவம் வாய்ந்தது; வெளிப்பட்ட 4 பேச்சுகளுமே வெவ்வேறு காலகட்டங்களில் பேசப்பட்டவை. படிப்பவர்களுக்குக் குழப்பம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இது மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதை வெளிப்படுத்தியவர் தன்னிடம் ஏராளமான தகவல்களை வைத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

நம்மிடம் நல்ல வலைப்பின்னல் அமைப்புள்ள உளவு அமைப்புகளும் எதிர் உளவு அமைப்புகளும் உள்ளன. இதில், பாதுகாப்பான ஓரிடத்திலிருந்து இந்தத் தகவல்கள் வெளியாகியிருந்தாலும் நான் ஆச்சரியப்படமாட்டேன். அதே சமயம் வெளியான தகவல்களைக் கொண்டு பார்க்கும்போது இதைத் தனியார் அமைப்புதான் செய்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.

இப்படி ஒட்டுகேட்ட பேச்சுகளை வெளியிட்டு பிற வாரப்பத்திரிகைகளை "அவுட்லுக்' வெற்றி கண்டுள்ளது; அதே சமயம், தேசப் பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் ஏதும் தங்களிடம் இருக்குமேயானால் அவர்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்.

நியூயார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் காரில் குண்டு வைத்த ஃபைசல் ஷசாத் என்ற அமெரிக்கக் குடியுரிமை பெற்ற பாகிஸ்தானியர், வெளிநாட்டுக்குத் தப்பிச்செல்ல முற்பட்டபோது ஜான் எஃப். கென்னடி விமான நிலையத்தில் சம்பவம் நடந்த 48 மணி நேரத்துக்குள் பிடிபட்டார் என்பதைப் பார்க்கிறோம். தில்லியில் குண்டு வெடிக்கப் போகிறது என்று அமெரிக்கா, ஆஸ்திரேலியாவிலிருந்து இடைவிடாமல் தகவல்கள் வந்த பிறகு நாமும் அத்தகைய சதிகாரனை ஸ்ரீநகரில் பிடிக்கிறோம். நம் நாட்டின் பாதுகாப்பைக் கருதி இத்தகைய நவீன ஒட்டுகேட்பு சாதனங்கள் நமக்கு அவசியப்படுகின்றன; ஏதோ காரணத்துக்காக இதைப் பயன்படுத்தும் அன்னிய நாடுகளிடமிருந்து இத்தகைய துப்புகளை நாம் பெறுவது சரியாக இருக்காது.

வெட்டுத் தீர்மானத்தால் ஏற்பட்ட அரசியல் விளைவுகள் மேலும் சில நாள்களுக்குத் தொடரும். எதிர்த்தலும் ஆதரித்தலுமாக பகுஜன் சமாஜ் கட்சி நடத்தும் அரசியல் மேலும் சில காலத்துக்கு இப்படியே தொடர்ந்தால்தான் மத்திய அரசு நீண்ட காலம் பதவியில் நீடிக்க முடியும், அது அவ்வப்போது முரண்டு செய்யும் தோழமைக் கட்சிகளுக்கு ஒரு பாடமாக அமையும்.

தன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் சி.பி.ஐ.யின் போக்கு மாறுவதால் மாயாவதிக்கு ஆதாயம் கிடைக்கும்; லாலு பிரசாத், முலாயம் சிங் ஆகியோர் மீதான ஊழல் வழக்கு விவகாரங்களிலும் முன்பு நாம் இதையே பார்த்திருக்கிறோம். புதிய சூழலில் உச்ச நீதிமன்றம் எப்படி நடந்து கொள்ளப் போகிறது என்பதை அறிய ஆவலாக இருக்கிறது.

மாயாவதி ஒன்றும் அரசியல் களத்துக்குப் புதியவர் அல்லர்; உத்தரப்பிரதேசத்தில் அதிகதொகுதிகளில் தங்களுடைய கட்சி வெற்றி பெற காங்கிரஸ் முயற்சி எடுக்கும்போது, தான் யாரென்பதைக் காட்டுவார் மாயாவதி.

மேற்கு வங்க மாநில நகரசபைத் தேர்தலில் தொகுதி உடன்பாடு ஏற்படாமல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவே தனது வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது திரிணமூல் காங்கிரஸ் கட்சி. போர்க்களத்தில் குதித்துவிட்டால் எதிரே நிற்பவர் எதிரிதான், நண்பர் இல்லை என்று காட்டமாக அறிவித்துவிட்டார் மம்தா பானர்ஜி. அடுத்து மேற்கு வங்க சட்டப் பேரவை பொதுத் தேர்தலாக இருந்தாலும் மக்களவை பொதுத் தேர்தலாக இருந்தாலும் மம்தாவின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்று காட்டிவிட்டார். தேர்தல் முடிவு வந்த பிறகு அது காங்கிரஸýக்கும் திரிணமூல் காங்கிரஸýக்கும் ஒரு படிப்பினையாகவே இருக்கும்.

திமுகவின் வாரிசுச் சண்டை தில்லிக்கே வந்துவிட்டது; 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் யாருக்கும் எதையும் தெளிவாகத் தெரிவித்துவிடவில்லை. அந்தப் பரிமாற்றம் குறித்து பல கதைகள் தில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றன. தமிழக முதல்வர் மு. கருணாநிதி, தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா, தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று காங்கிரஸ்காரர்களுக்கு நினைவுபடுத்துகிறார். உத்தரப்பிரதேச முதல்வரும் பகுஜன் சமாஜ் தலைவருமான மாயாவதிக்கு அளித்த அதே சலுகையை ஆ. ராசாவுக்கும் தர வேண்டும் என்று மறைமுகமாக உணர்த்துகிறார்.

கூட்டணி அரசியல் காரணமாக மத்திய அரசுக்கு சுமார் 50,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதுதான் வருத்தம் தரும் விஷயம்.

பிரதமர் எழுதியதாகக் கூறப்படும் கடித விவகாரம் இந்த விவகாரத்தில் மிக மோசமான ஒரு அம்சமாகும். இத்தோடு இந்த விவகாரம் முடிந்துவிடாது என்று மட்டும் தெரிகிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் உலகக் கோப்பைக்கான டுவென்டி டுவென்டி போட்டிகள் இப்போது மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் தொடக்க கட்டத்தில் இந்தியா நன்றாக விளையாடியிருக்கிறது. இந்தியாவில் ஐ.பி.எல். நடத்திய போட்டிக்கும் மேற்கிந்தியத் தீவில் ஐ.சி.சி. நடத்தும் போட்டிக்கும் உள்ள வித்தியாசங்களைப் பாருங்கள். அடிப்படையில் இரண்டு போட்டிகளுமே ஒன்றுதான், ஆனால் ஐ.சி.சி. நடத்தும் போட்டி ஏனோ விறுவிறுப்பின்றி, கவர்ச்சியின்றி சோகையாகக் காட்சி தருகிறது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் கன்ட்ரோல் போர்டு (பி.சி.சி.ஐ.) லலித் மோடி மீது குற்றம் சுமத்துவதிலேயே தீவிரமாக இருக்கிறது. அவர் இன்னமும் தன்னுடைய தரப்பை முழுமையாகத் தெரிவித்ததாகத் தெரியவில்லை. அதற்குள்ளாகவே, கடந்த 3 ஆண்டுகளாகவே நிர்வாகக் குழுவில் எல்லாம் ஒழுங்காகவே நடந்தது, லலித் மோடி மட்டுமே குற்றவாளி என்று கூறப்படுகிறது. இதை உண்மை என்று ஒரு சிலர்தான் நம்பக்கூடும். வருவாய்ப்புலனாய்வுப் பிரிவின் அமல்பிரிவு இயக்குநரகமும் வருமான வரித்துறையும் லலித் மோடியை விசாரிப்பதுடன் நிறுத்திக் கொள்வார்களா அல்லது அணிகளின் உரிமையாளர்களிடமும் விசாரிப்பார்களா அல்லது பி.சி.சி.ஐ.யுடன் கருத்து வேறுபாடு உள்ளவர்களிடமும் விசாரணை நடக்குமா என்றெல்லாம் கேள்விகள் பிறக்கின்றன.

ஐ.பி.எல். விவகாரத்தில் தொடங்கிய சண்டை இப்போது வேறு துறைகளுக்கும் பரவியிருக்கிறது. விளையாட்டுத் துறை அமைச்சர் எம்.எஸ். கில், பல்வேறு விளையாட்டுச் சங்கங்களின் தலைவர்களாக நீண்ட காலமாக இருப்பவர்களை நீக்கும் நடவடிக்கையைத் தொடங்கியிருக்கிறார். இதை அவர்கள் பலமாக எதிர்க்கின்றனர். இந்த விவகாரத்திலும் உண்மையான நோக்கம் என்ன என்பது வெளிவர சிறிது காலம் பிடிக்கும். விளையாட்டிலும் அரசியல்வாதிகளின், அதிகாரிகளின் தலையீடு இருப்பது குறித்து மீண்டும் விவாதம் தொடங்கியிருக்கிறது.

ஆயுள் காலம் முழுக்க ஒருவர் ஒரு விளையாட்டு சங்கத்துக்குத் தலைவராக இருப்பது என்பது ஆண்டான் - அடிமைக் காலம் போல இல்லையா என்றும் கேட்கப்படுகிறது.

0 comments:

downloads

  • Love Records: - *W*e believe that every day is a *Valentine's Day* because someone somewhere is falling in love and that day is going to be the most important day in his/h...
    14 years ago
  • காதலிக்கக் கற்று கொள் ! - இத்தனை வருடமாய் கற்றுக் கொண்ட என் வாழ்க்கை ஒற்றை நொடியில் முடியும் முன்... நீ காதலிக்கக் கற்று கொள் !
    14 years ago

Total Pageviews

Twitter Updates

Meet The Author

Get In Touch

Powered by Blogger.

Blog Archive