Saturday, May 8, 2010

0

ஜெ உயிருக்கு ஆபத்து என்று என் மீது பழி போட முயற்சி செய்வதா?-கருணாநிதி


சென்னை: முதல்வருக்குப் பொறுப்பு என்று குற்றம் சாட்டி, இவர்கள் (அதிமுகவினர்) ஜெயலலிதாவுக்கு எந்த ஆபத்தையும் விளைவிக்காமல் இருந்தால் போதும் என்று கருணாநிதி கூறினார்.

சட்டசபையில் இன்று காவல்துறை, தீயணைப்புத்துறை, மது விலக்கு மற்றும் ஆயத் தீர்வை ஆகியவை மீதான மானியக் கோரிக்கைகளை முதல்வர் கருணாநிதி சார்பில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

இதையடுத்து நடந்த விவாதம்:

சேகர்பாபு (அதிமுக): தமிழ்நாட்டில் காவல்துறை நிலைமை மிகவும் மோசமாகி விட்டது. அதிமுக ஆட்சியில் நடந்ததை விட கொள்ளை திருட்டு போன்ற சம்பவங்கள் பல மடங்கு அதிகமாகி விட்டன. பூட்டிய வீட்டிலும் கொள்ளை நடக்கிறது. திறந்த வீட்டிலும் கொள்ளை நடக்கிறது. பூட்டிய கடையிலும் கொள்ளை நடக்கிறது. திறந்த கடையிலும் கொள்ளை நடக்கிறது. சாதாரண மக்களிடமும் கொள்ளை நடக்கிறது. சப்-இன்ஸ்பெக்டரிமும் கொள்ளை நடக்கிறது.

தலைநகரான சென்னையில் கொலை, கொள்ளை ஆள் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து அதிகரித்துள்ளது. காவல் துறையின் நிலைமை பரிதாபமாக உள்ளது.

வழக்கறிஞர்கள்- போலீசார் மோதல் பிரச்சனையில் வக்கீல்களும் நீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறார்கள் காவல் துறையினரும் நீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறார்கள். காவல் துறை உயர் அதிகாரிகளிடம் ஒற்றுமை இல்லை. நீதிமன்றத்தில் கலவரம், மாணவர்கள்- போலீசார் மோதல், நீதிமன்றத்தில் நடைபெறும் ஒரு விழாவில் முதல்வர் முன்னிலையிலேயே பத்திரிகையாளர்கள் தாக்கப்படுகிறார்கள். ஆனால் அதற்கு முறையாக வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

அமைச்சர் பரிதி இளம்வழுதி: 2001ம் ஆண்டில் எங்கள் தலைவரை கைது செய்ததை கண்டித்து பேரணி நடத்தியபோது காவல் துறையுடன் சேர்ந்து கூலிப் பட்டாளம் ஒருவரை வெட்டிக் கொலை செய்தது. அதையே மறைக்கப் பார்த்தவர்கள் தானே நீங்கள்.

சேகர்பாபு: நீதிமன்றத்தில் நடந்த சம்பவத்தை கண்டித்து ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தக்கூட போலீஸ் அனுமதி வழங்கவில்லை. அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி துறையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றவர் எங்கள் தலைவி அம்மா முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவி. ஏராளமான மகளிர் காவல் நிலையங்களையும் அமைத்துத் தந்தார். ஆனால், மகளிர் காவல் நிலையங்களின் எண்ணிக்கையை திமுக அரசு அதிகரிக்கவில்லை.

போலீஸ் துறையை நவீனமயமாக்க அதிமுக ஆட்சியில் அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டது. இந்த ஆட்சியில் போதிய நிதி ஒதுக்கவில்லை.

துணை முதல்வர் ஸ்டாலின்: பெண்களுக்கு உள்ளாட்சித் துறையில் 33 சதவீத இட ஒதுக்கீடு அளித்து உங்கள் ஆட்சியில் சட்டம் கொண்டு வந்திருக்கலாம். ஆனால், அதை செயல்படுத்திய ஆட்சி திமுக. 2001 முதல் 2006 வரை போலீஸ் துறையை நவீனப்படுத்த ரூ. 542 கோடி ஒதுக்கப்பட்டது. இப்போது 2006 முதல் 2010 வரை மட்டும் ரூ. 428 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் முன்பு மத்திய அரசு 50 சதவீத நிதியை வழங்கியது. இப்போது மாநில அரசின் பங்கு 75 சதவீதமாகவும் மத்திய அரசின் பங்கு 25 சதவீதமாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
என்றாலும் கடந்த ஆட்சியில் ரூ. 1,600 கோடியாக இருந்த காவல்துறை நிதி ஒதுக்கீடு இந்த ஆட்சியில் ரூ. 2,900 கோடியாக உயர்ந்துள்ளது.

சேகர்பாபு: இந்த ஆட்சியில் போலீசார் ஜாலியாக நடமாடுகிறார்கள். போலி மருந்து, போலி உணவு, போலி சாமியார், போலி அதிகாரி என்று.... சொல்லவே மூச்சு முட்டுகிறது. கடந்த ஆட்சியின்போது கொலைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இப்போது அதிகரித்துள்ளது.ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ. 1,500 கோடி மோசடி செய்த ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவருக்கு அடைக்கலம் கொடுத்த கோவை பிரமுகரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் சென்னையில் அடைக்கலம் கொடுத்த பிரமுகர் கைது செய்யப்படவில்லை.

விசாரித்தபோது அவர் கே.கே. நகரில் உள்ள மாநகராட்சி உறுப்பினர் என்று தெரிய வருகிறது. விசித்திரமான கொலை, புதுமையான திருட்டுகளின் புகழிடமாக சென்னை மாறி விட்டது. பனையூர் கொலையில் பயன்படுத்தப்பட்ட கார் யாருடையது என்று இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

எங்கள் கட்சியின் தலைவி விடுதலைப் புலிகளையும், தீவரவாதத்தையும் கடுமையாக எதிர்ப்பவர். அவர் பொதுக்கூட்டத்தில் பேசினால் உரிய பாதுகாப்பு அளிக்கப்படுவதில்லை.அவர் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

மு.க. ஸ்டாலின்: சேகர்பாபு திரும்ப, திரும்ப சில தவறான தகவல்களையே தெரிவிக்கிறார். பனையூரில் 24.8.2009ல் இளங்கோவும், அவரது மனைவியும் கொலை செய்யப்பட்டார்கள். தப்பி ஓடிய எதிரி ராஜனை பொது மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர் உடல் நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். இது பற்றிய விசாரணை மாநில புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு ராஜன் தனி நபராகத்தான் சென்று ஆதாயத்துக்காக கொலை செய்தார் என்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் தொடர்பு எதுவுமே இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

கே.கே. நகர் பகுதி மாநகராட்சி உறுப்பினர் ஒருவரை மோசடி கும்பலுடன் தொடர்புபடுத்தி கூறினார். இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு.

சேகர்பாபு: இந்த ஆட்சியில் காவல் துறையினரே தாக்கி கொலை செய்யப்படுகிறார்கள். இரவில் வாகனங்கள் எரிக்கப்படுகின்றன. கொலை செய்யப்பட்டவர்களின் தலையை கூட கண்டுபிடிக்க முடியவில்லை.

மு.க. ஸ்டாலின்: சென்னையில் கொலைகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்று உறுப்பினர் கூறுவது தவறான தகவல். கொலைகள் அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. அதிமுக ஆட்சியில் கொலை செய்யப்பட்ட எம்.கே. பாலன் உடல் என்ன ஆனது?

சேகர்பாபு: அந்த கொலை சம்பவத்தில் அதிமுக ஆட்சியின்போது குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றுள்ளனர்.

மு.க. ஸ்டாலின்: காணாமல் போன உடல் என்ன ஆயிற்று என்பது தான் என் கேள்வி?

சேகர்பாபு: காவல் துறை சரிவர செயல்படாததால் இந்த ஆட்சி மோசமாக உள்ளது. மீண்டும் எங்கள் ஆட்சி வரும். இந்த நிலைமை மாறும்.

முதல்வர் கருணாநிதி: அவருடைய இறுதிக் கட்டப்பேச்சுக்கு நான் பதில் தரப் போவதில்லை. அதற்குத் தமிழ்நாட்டு மக்கள் வாக்குச் சீட்டுகள் மூலமாக அவர்களுக்கும், எங்களுக்கும் பதிலளிக்கத் தயாராக இருக்கிறார்கள். நான் இப்போது எழுப்புகின்ற பிரச்சனையெல்லாம், முதல்வராக இருந்த- இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற அவருடைய அம்மா அவர்களுக்கு இந்த ஆட்சியில் பொதுக் கூட்டங்களுக்கும், மற்ற நிகழ்ச்சிகளுக்கும் செல்லும்போது, காவல் துறைப்பாதுகாப்பே இல்லை என்று அப்பட்டமான, ஒரு உண்மைக்கு மாறான தகவலைச் சொன்னார்.

அம்மையார் அவர்களுக்கு எவ்வளவு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. அவர் எத்தகைய பாதுகாப்பிலே செல்கிறார்கள். எந்த 'கேட்டகரியில்' அவருக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது என்ற விவரங்கள் எல்லாம் இந்த மாமன்றத்திலே பலமுறை விளக்கப்பட்டிருக்கின்றன. நானும் அறிக்கையின் மூலமாக எடுத்துக் காட்டியிருக்கின்றேன். இப்போது அவர் சொன்னார், அம்மையார் அவர்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால், அதற்கு முதல்வர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

ஆக, இதிலேயிருந்து என்ன புரிகிறது என்றால், முதல்வருக்குப் பொறுப்பு என்று குற்றஞ்சாட்டி, இவர்கள் யாரும் அம்மையாருக்கு எந்த ஆபத்தும் விளைவிக்காமல் இருந்தால் போதும் என்பதை மாத்திரம் நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

செங்கோட்டையன் (அதிமுக): எங்கள் அம்மாவுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அவரை பாதுகாக்க எங்கள் உயிரைக் கொடுப்போம். உங்கள் மீது பழி போட மாட்டோம்.

முதல்வர் கருணாநிதி: ஏற்கனவே சேகர்பாபு பேசிய பேச்சு அவைக் குறிப்பில் பதிவாகி இருக்கிறது. அவர்கள் அம்மாவுக்கு ஆபத்து ஏற்பட்டால் பொறுப்பை முதல்வர் தான் ஏற்கவேண்டும் என்று கூறியிருக்கிறார். இதை செங்கோட்டையன் ஏற்றுக் கொள்வாரா?

காவல்துறை செயல்பாடு மனநிறைவு அளிக்கிறது:

முன்னதாக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட போலீஸ் மானிய கோரிக்கைகள் மீதான கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் பெரிய அளவிலான சட்டம்- ஒழுங்கு பிரச்சனை எதுவும் நிகழாமல் அமைதி நிலவியது. ஜாதி, மத, பூசல்கள் பெரிய அளவில் நடக்கவில்லை. போலீசார் சட்டம்- ஒழுங்கு பிரச்சனையில் திறமையாக செயல்பட்டு சமூக விரோத சக்திகள் மற்றும் போக்கிரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக தமிழ்நாடு அமைதியின் உறைவிடமாக திகழ்ந்தது.

காவல்துறையின் ஒட்டுமொத்த செயல்பாடு மன நிறைவு அளிப்பதாக உள்ளது. போக்குவரத்து போலீசார் திறமையாக செயல்பட்டு பல்வேறு ஆலோசனைகளையும், விழிப்புணர்வையும் மக்களுக்கு தெரிவிப்பதால் சாலை விபத்துகள் குறைந்து வருகிறது.

கடந்த ஆண்டை காட்டிலும் போக்குவரத்து விபத்துக்கள் குறைந்துள்ளன. தேசிய அளவிலும் அண்டை மாநிலங்களிலும் மாவோயிஸ்டுகள், பயங்கரவாதிகள், மத அடிப்படைவாதிகள் ஆகியோரின் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டில் அத்தகைய நடவடிக்கைகள் கால் ஊன்றாமல் தடுத்திட காவல் துறையை பலப்படுத்துவது அவசியமாகிறது என்று கூறப்பட்டுள்ளது.

0 comments:

downloads

  • Love Records: - *W*e believe that every day is a *Valentine's Day* because someone somewhere is falling in love and that day is going to be the most important day in his/h...
    14 years ago
  • காதலிக்கக் கற்று கொள் ! - இத்தனை வருடமாய் கற்றுக் கொண்ட என் வாழ்க்கை ஒற்றை நொடியில் முடியும் முன்... நீ காதலிக்கக் கற்று கொள் !
    14 years ago

Total Pageviews

Twitter Updates

Meet The Author

Get In Touch

Powered by Blogger.

Blog Archive