மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடக்கும் திருவிழாக்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது சித்திரை திருவிழாவாகும். இந்த ஆண்டு சித்திரை திருவிழா நேற்று (16,4,2010) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி இந்திய நேரப்படி காலை 9.40 மணிக்கு மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் விசேஷ அலங்காரத்துடன் சுவாமி சன்னதி எதிரே உள்ள கொடிமரம் அருகே எழுந்தருளினார்கள்.
கோவில் பட்டர்கள் மந்திரம் ஓத, விநாயகர் பூஜை,வருண வழிபாடு, கும்ப பூஜை, பஞ்சகவ்யா பூஜை, நவசாந்தி பூஜை ஆகியவை நடைபெற்றது. பின்னர் கொடியில் உள்ள நந்தி மற்றும் சுவாமி படத்திற்கு பூஜை செய்யப்பட்டது. காலை 9.52 மணியளவில் மிதுன லக்கினத்தில் மேளதாளம் முழங்க பிச்சைக்கண் என்ற சந்திரசேகர பட்டர் கொடியேற்றினார்.
தொடர்ந்து கொடி மரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. கோவில் ஓதுவார்கள் வேதமந்திரங்களை பாடினார்கள். பின்பு உற்சவ சுவாமிகள் சன்னதி 2 ம் பிரகாரத்தை 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருவிழாவின் முதல் நாளான நேற்று இரவு 7 மணிக்கு கோவிலுக்குள் உள்ள குலாலர் மண்டகப்படியில் மீனாட்சி அம்மன் சிம்ம வாகனத்திலும், பிரியாவிடையுடன் மீனாட்சி சுந்தரேசுவரர் கற்பகவிருட்சம் வாகனத்திலும் எழுந்தருளினார்கள். பின்பு செண்டை மேளம் முழங்க யானை, ஓட்டகம் முன்பு செல்ல சுவாமியும், அம்மனும் நான்கு மாசி வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
திருவிழாவில் வரும் 23 ம் திகதி இரவு இந்திய நேரப்படி 7.06 மணி முதல் 7.30 க்குள் அம்மன் சன்னதியில் மீனாடசிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் அம்மனின் பிரதிநிதியாக அறங்காவலர் குழு தலைவர் கரு.முத்து கண்ணன் செங்கோலை பெற்றுக் கொண்டு சுவாமி சன்னதி வலம் வந்து மீண்டும் மீனாட்சியிடம் செங்கோலை கொடுப்பார். 24 ம் திகதி இரவு திக்விஜயம் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மன் திருக்கல்யாணம் 25 ம் திகதி நடக்கிறது. அன்று காலை இந்திய நேரப்படி 9.22 முதல் 9.58 மணிக்குள் ஆடிவீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் மீனாட்சிக்கும், சுந்தரேசுவரருக்கும் திருமணம் நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேர்த்திருவிழா வரும் 26 ம் திகதி நடைபெறுகிறது. அன்று காலை 6 மணிக்கு மீனாட்சியும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் தனித்தனி தேர்களில் எழுந்தருளி நகரை வலம் வருவார்கள். பினன்ர் 27 ம் திகதி தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் சித்திரைத்திருவிழா முடிவடைகிறது.
இதற்கிடையே அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் 26 ம் திகதி மதுரைக்கு புறப்படுகிறார். 27 ம் திகதி எதிர்சேவை நடக்கிறது. சித்ரா பவுர்ணமியான 28 ம் திகதி காலை குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.
0 comments: