பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய பெண்கள் அணி
பாகிஸ்தானை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
வெஸ்ட் இண்டீசில் இரண்டாவது பெண்கள் "டுவென்டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, இலங்கை உட்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று "பி' பிரிவில் நடந்த லீக் போட்டியில் இந்திய பெண்கள் அணி, பாகிஸ்தானை சந்தித்தது. "டாஸ்' வென்ற பாகிஸ்தான் கேப்டன் சானா மிர், பேட்டிங் தேர்வு செய்தார்.
ராய் அபாரம்:
பாகிஸ்தான் அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. அபிடி (20), ஷா (2), நிடா தர் (1), பிஸ்மா (0) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். கேப்டன் சானா மிர், 35 ரன்கள் எடுத்து அவுட்டானார். கடைசி நேரத்தில் மும்தாஜ் (26*) ஓரளவு கைகொடுக்க, பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 104 ரன்கள் மட்டும் எடுத்தது. இந்தியாவின் பிரியங்கா ராய் 3 விக்கெட் வீழ்த்தினார்.
ராத் அசத்தல்:
போகிற போக்கில் எட்டிவிடும் இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு நாயக் (16) ஏமாற்றம் தந்தார். அடுத்து வந்த பூனம் ராத், மிதாலி ராஜ் இணைந்து அணியை வெற்றியை நோக்கி, அழைத்துச் சென்றனர். இந்திய பெண்கள் அணி 16.4 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 106 ரன்கள் எடுத்து, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், அசத்தல் வெற்றி பெற்றது. நாளை இலங்கை அணியை வீழ்த்தும் பட்சத்தில் இந்திய அணி, அரையிறுதிக்கு முன்னேறும்.
அரையிறுதியில் ஆஸி.,:
நேற்றுமுன்தினம் நடந்த "ஏ' பிரிவு லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு நிட்செகி (44), பவுல்டன் (39), காமிரான் (27) கைகொடுத்தனர். ஆஸ்திரேலிய அணி 19.3 ஓவரில் 155 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
சற்று கடினமான இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு டுபிரீஜ் (53*), சேட்டி (25) ஆறுதல் அளித்தனர். தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து, 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
வெஸ்ட் இண்டீஸ் அபாரம்:
"ஏ' பிரிவில் நடந்த மற்றொரு லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்தது. சுலப இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 120 ரன்கள் மட்டும் எடுத்து, 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த வெற்றியின்மூலம் "ஏ' பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா 4 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியன. இதனால் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்க அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்தன.
0 comments: