Sunday, May 9, 2010

0

ஒரு தேசத்தின் கௌரவம்!

துப்பாக்கிகளும் குண்டுகளும் வெடித்துச் சிதறிய வீதிகளில் சிறுவர்களும் இளைஞர்களும் ஆர்வத்துடன் கிரிக்கெட் விளையாடுகின்றனர். தீவிரவாதம் நிறைந்திருந்த நாட்டில் இப்போது 320-க்கும் மேற்பட்ட கிரிக்கெட் அணிகள்.

ஆம்... ஆப்கானிஸ்தானின் முகத்தை மாற்றி அமைத்திருக்கிறது கிரிக்கெட். பன்னாட்டுப் படைகள் கூட்டுசேர்ந்து தலிபான்களுக்கு எதிரான போர் என்ற பெயரில் ஆப்கானிஸ்தானை சிதைத்துக் கொண்டிருக்கும் வேளையில், 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் விளையாடத் தகுதி பெற்றதன் மூலம் உலக நாடுகளின் புருவங்களை உயர்த்தச் செய்துள்ளது அந்த நாடு.

ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் பற்றி ஹாலிவுட்டில் படம் இயக்குகிறார் ஆஸ்கர் விருது பெற்ற "அமெரிக்கன் பியூட்டி' படத்தின் இயக்குநர் சாம் மென்டஸ்.

போர், போதைப்பொருள், தலிபான்கள், மதப் பழைமைவாதம் என பலமுனை தாக்குதல்களைச் சந்தித்த ஒரு நாடு, அதிலிருந்து மீண்டு வருவது என்பது சுபலமல்ல. ஆனால், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டின் துணையுடன் அதை சாதித்துக் காட்டி வருவது வரவேற்கத்தக்கது.

ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் வளர்ந்த கதை ஆச்சரியமானது. அகதிகள் முகாம்களில்தான் கிரிக்கெட் பயின்றனர் ஆப்கானிஸ்தானியர். ஆம், 1990-களில் தலிபான்களின் ஆட்சியின்போது அகதிகளாக இடம்பெயர்ந்து பாகிஸ்தானில் முகாம்களில் தங்கியிருந்தபோதுதான் ஆப்கானிஸ்தானியர்களுக்கு கிரிக்கெட் மீது ஆர்வம் பிறந்து விளையாடிப் பழகினார்கள். பழைய துணிகளை பந்துகளாகவும், காலணிகளை ஸ்டம்புகளாகவும் பயன்படுத்தி தொடங்கிய ஆட்டம், இன்று சர்வதேச அளவுக்கு கொண்டுவந்துள்ளது.

1995-ல் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் பெடரேஷன் (இப்போது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம்) ஆரம்பிக்கப்பட்டது. இருப்பினும், மற்ற விளையாட்டுகளைப் போல கிரிக்கெட்டுக்கும் தடைவிதித்திருந்தனர் தலிபான்கள். 2002-ல் தலிபான்களின் வீழ்ச்சிக்குப் பின்னர், படிப்படியாக கிரிக்கெட் ஜூரம் பரவத் தொடங்கி, இன்று உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் அணிகளுள் ஒன்றாக உருவெடுத்துள்ளது ஆப்கன் அணி.

நவ்ரோஸ் மங்கள் தலைமையிலான அந்த அணியின் அத்தனை பேரும் இளைஞர்கள். தங்கள் தேசத்தின் பெருமையை உலகறியச் செய்ய வேண்டும் என்ற துடிப்பு மிக்கவர்கள்.

இத்தனைக்கும் ஆப்கானிஸ்தானில் சர்வதேச தரம் வாய்ந்த மைதானம் கிடையாது. இந்தியாவைப் போல அணிகளை கோடிகளில் ஏலம் எடுக்க ஆள் கிடையாது. ஏன், உருப்படியான கிரிக்கெட் உபகரணங்கள்கூட கிடையாது. பிற நாடுகளுடனான பயிற்சி ஆட்டங்களைக்கூட பாதுகாப்பு காரணங்கள் மற்றும் மைதான வசதி காரணமாக வெளிநாடுகளில்தான் ஆடவேண்டிய கட்டாயம்.

ஆப்கானிஸ்தானில் உள்ள இங்கிலாந்து, அமெரிக்க தூதரகங்கள்தான் நிதி உதவி உள்ளிட்ட சில உதவிகளைச் செய்து வருகின்றன.

அத்தனை சிரமங்களையும் கடந்து, தகுதிப் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம், அயர்லாந்து அணிகளை வீழ்த்தி 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது ஆப்கானிஸ்தான் அணி.

இப்போதுதான் சர்வதேச தரத்துடன் காபூல் அருகேயுள்ள ஜலாலாபாதில் ஒரு கிரிக்கெட் மைதானத்தை கட்டும் பணியை ஆப்கன் அரசு துவக்கியுள்ளது. 5 மில்லியன் டாலரில் அமையப்போகும் இந்த மைதானம் ஆப்கன் கிரிக்கெட்டை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்லக்கூடும்.

வெளிநாட்டு அணிகளை தங்கள் நாட்டுக்கு வரவழைத்து, தங்கள் நாட்டின் கௌரவத்தை உயர்த்திக் கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையலாம்.

ஆப்கன் அணியைப் பொருத்தவரை, எந்த அணியையும் வென்றாக வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை; ஆனால், "லகான்' படத்தில் பிரிட்டிஷ் கிரிக்கெட் அணியை கிராமத்து இளைஞர்கள் கொண்ட அணி வெற்றிகொண்டதுபோல, எந்த அணியையும் ஆப்கன் அணி வெல்லலாம்.

ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட்டின் வளர்ச்சி ஒருபுறம் இருக்கட்டும், தலிபான்களுக்கு எதிரான போரால் ஏறக்குறைய நாடு முழுவதுமே சின்னாபின்னமான நிலையில், எதிர்கால வாழ்க்கையை இருட்டில் தேடிக் கொண்டிருந்த ஆப்கன்வாசிகளுக்கு இந்த கிரிக்கெட் மூலம் ஒரு புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றால் அது மிகையல்ல.

ஆப்கானிஸ்தானியர் அனைவரும் துப்பாக்கிகளுக்கு பதிலாக கிரிக்கெட்டை தேர்வு செய்ய வேண்டும் என்று ஒருமுறை கூறினார் ஆப்கன் கிரிக்கெட் பெடரேஷனின் நிறுவனர் அல்லாதத் நூரி. ஆம் அது இன்று உண்மையாகியுள்ளது.

தனிப்பட்ட விமர்சனங்களையும் தாண்டி ஒரு தேசத்தின் கௌரவமாக மாறியுள்ளது கிரிக்கெட். அந்த வகையில் கிரிக்கெட்டிற்கு ஒரு வந்தனம்.

ஆப்கானிஸ்தானை பொருத்தவரை அந்த நாட்டின் கிரிக்கெட் வீரர்கள்தான் அவர்களுடைய ஹீரோக்கள். அந்த ஹீரோக்களின் ஹீரோக்கள் யார் தெரியுமா? நம் இந்திய அணி வீரர்களே. அந்த வகையில் நமக்கும் அது கௌரவம்தான்.

0 comments:

downloads

  • Love Records: - *W*e believe that every day is a *Valentine's Day* because someone somewhere is falling in love and that day is going to be the most important day in his/h...
    14 years ago
  • காதலிக்கக் கற்று கொள் ! - இத்தனை வருடமாய் கற்றுக் கொண்ட என் வாழ்க்கை ஒற்றை நொடியில் முடியும் முன்... நீ காதலிக்கக் கற்று கொள் !
    14 years ago

Total Pageviews

Twitter Updates

Meet The Author

Get In Touch

Powered by Blogger.

Blog Archive