கசாப்பின் தண்டனை நிறைவேற்றத்தை தாமதிக்கக் கூடாது: வெங்கய்ய நாயுடு
ஹைதராபாத், மே 7: அப்சல் குரு வழக்கு போன்று அஜ்மல் கசாப் வழக்கும் மாறிவிடக்கூடாது; உடனடியாக தண்டனை நிறைவேற்றப்படவேண்டும் என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கய்ய நாயுடு கூறினார்.
இதுகுறித்து நிருபர்களுக்கு ஹைதராபாதில் வெங்கய்ய நாயுடு அளித்த பேட்டி:
நாடாளுமன்றக் கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் அப்சல் குருவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அந்த தண்டனை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
அதேபோல மும்பை தாக்குதல் வழக்கில் அஜ்மல் கசாபுக்கு அளிக்கப்பட்ட தண்டனையும் மாறிவிடக்கூடாது. அஜ்மல் கசாபுக்கு உடனடியாக மரண தண்டனை நிறைவேற்றப்படவேண்டும் என்று நாட்டு மக்கள் விரும்புகின்றனர்.
அப்சல் குருவுக்கு தண்டனையை தாமதம் செய்து வருவது போல இதையும் தாமதம் செய்யக்கூடாது என்று மக்கள் விரும்புகின்றனர். தண்டனையை நிறைவேற்றுவதற்கு உண்டான பணிகளை உடனடியாக துவங்கவேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அஜ்மல் கசாப் வழக்கில் வெளிப்படையான முறையில் நடந்த விசாரணையால் உலக அளவில் நாட்டின் பெருமை உயர்ந்துள்ளது.
பயங்கரவாதம் தொடர்பான விஷயத்தில் பாகிஸ்தான் இரட்டை நிலையை கடைப்பிடிப்பது கண்டிக்கத்தக்கது. மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து பாகிஸ்தான் இந்தியாவிடம் ஒப்படைக்கவேண்டும்.
இது பாகிஸ்தானின் நேர்மைக்கு சோதனை போன்றதாகும். பயங்கரவாதத்துக்கு எதிராக அமெரிக்காவுடன் சேர்ந்து போர்புரியும் பாகிஸ்தான், காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஆதரித்து வருகிறது. பாகிஸ்தான் இந்த இரட்டை நிலை கண்டிக்கத்தக்கது.
பயங்கரவாதத்தின் மையமே பாகிஸ்தானில்தான் அமைந்திருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிக்கும் வரை அந்த நாட்டுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி பயன் இல்லை.
நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கம் பகுதியில் குண்டு வைத்ததாக பாகிஸ்தானைச் சேர்ந்த ஃபைசல் ஷாசத் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் உலகம் முழுவதும் நடந்து வரும் பயங்கரவாதச் செயல்களுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது என்றார் அவர்.
0 comments: