இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு மீது மான நஷ்ட வழக்கு தொடர லலித் மோடி முடிவு
புதுடில்லி : இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தலைவர் கைல்ஸ் கிளார்க் மீது மானநஷ்ட வழக்கு தொடர மோடி முடிவு செய்துள்ளார். மேலும் இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,), தன்னை 'நம்பர்-1' எதிரியாக பார்ப்பதாகவும் லலித் மோடி ஆவேசமாக தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூருடன் மோதல் மற்றும் ஊழல் புகார் காரணமாக ஐ.பி.எல்., அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து லலித் மோடி 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இவரிடம் விளக்கம் கேட்டு பி.சி.சி.ஐ., நோட்டீஸ் அனுப்பியது. பின், கவுன்டி அணிகளுடன் சேர்ந்து இங்கிலாந்தில் போட்டி ஐ.பி.எல்., தொடரை நடத்த மோடி திட்டமிடுவதாக இன்னொரு குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு விளக்கம் கேட்டு பி.சி.சி.ஐ., சார்பில் இரண்டாவது நோட்டீஸ் அனுப்பபட்டது.
ஆயிரம் பக்கம்: தற்போது முதல் நோட்டீசுக்கு பதில் அளிப்பதில் மோடி மிகவும் 'பிசியாக' இருக்கிறார். சுமார் ஆயிரம் பக்கங்கள் கொண்ட அறிக்கையை நாளை சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், பி.சி.சி.ஐ., நிர்வாகிகள் சிலர் மீதும் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். நேற்று டில்லி வந்த மோடி சட்ட நிபுணர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பின் மோடி அளித்த பேட்டி: முதல் நோட்டீசுக்கு எனது விளக்கத்தை வரும் திங்கட்கிழமை சமர்ப்பிக்க உள்ளேன். இதற்கு இறுதி வடிவம் கொடுக்கவே டில்லியில் சட்ட நிபுணர்களை சந்தித்தேன். இப்பிரச்னையில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்பதால், நேரிடையாக பதில் அளிப்பேன். மிக நீண்ட காலமாக இந்திய கிரிக்கெட் போர்டு என்னை 'நம்பர்-1' எதிரியாக நடத்துகிறது. இது, தற்போது பழகி விட்டது. இரண்டாவது நோட்டீஸ் பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. இதற்கு பதில் அளிக்க 15 நாட்கள் அவகாசம் இருக்கிறது. நான் 'சஸ்பெண்ட்' செய்யப் பட்டிருப்பதால், ஐ.பி.எல்., அமைப்புக்கு எவ்வித பாதிப் பும் ஏற்படாது. இதனை சிறப்பாக நடத்த தகுதி வாய்ந்த நிறைய பேர் இருக்கின்றனர். மிகவும் வலிமையான அமைப்பாக உருவாக்கியுள்ளோம். இது உலக அளவிலான அமைப்பு என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு மோடி கூறினார்.
மானநஷ்ட வழக்கு? ஐ.பி.எல்., போட்டிக்கு சவாலாக 'டுவென்டி-20' தொடரை இங்கிலாந்தில் நடத்த லலித் மோடி திட்டமிடுவதாக கூறப்பட்டது. இதனை தெரிவித்த இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தலைவர் கைல்ஸ் கிளார்க் மீது மானநஷ்ட வழக்கு தொடர மோடி முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக நேற்று டில்லியில், பிரபல வக்கீல் ஹரிஷ் சால்வேயை சந்தித்து பேசினார்.
0 comments: