சிறிய விஷயங்களில் இருந்துதான் ஏராளம் கற்றுக் கொள்ள முடியும்:
"பிரம்மாண்டங்களைப் பார்த்துப் பார்த்து, சிறிய விஷயங்களைக் கண்டுகொள்வதில்லை; ஆனால், அந்தச் சிறிய விஷயங்களில்தான் ஏராளமாக கற்றுக் கொள்ள முடிகிறது' என்றார் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். திருச்சி சமயபுரத்திலுள்ள எஸ்ஆர்வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நிறைவடைந்த "கனவு மெய்ப்பட'- 4 நாள் பயிலரங்கில் அவர் மேலும் பேசியது: "அமெரிக்க எழுத்தாளர் தோரோ நடப்பது பற்றி மட்டும் 100 பக்கங்களைக் கொண்ட புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். பூமியுடன் நேரடியாகத் தொடர்புள்ளவை கால்கள் மட்டுமே. பள்ளிக் காலங்களில் விளையாடுவதைத் தவிர கால்களுக்கு இப்போது வேறெந்த வேலையும் நாம் கொடுப்பதில்லை. சோம்பேறி ஆவதற்கு முதல் அறிகுறி கால்களுக்கு எந்த வேலையும் கொடுக்காததுதான். சைபீரிய பறவைகூட இந்தியாவுக்கு பறந்தே வருகிறது. நாம் இங்குள்ள தாஜ்மகாலைக்கூட பார்க்கச் செல்வதில்லை. பயணம் செய்வதிலுள்ள அனுபவம் வேறெதிலும் கிடைக்காது. கல்விக் கூடங்களில் பயிலும் கல்வி மனித வாழ்க்கைக்கு நேரடியாக பயன்பட்டதில்லை. வகுப்பறை, பாடங்கள், தண்டனைக்குள்ளேயே நாம் முடங்கிவிடுகிறோம். ரஷிய எழுத்தாளர் ஆன்டன் ஷெக்காவோ தனது வீட்டின் முன் இருந்த காலியிடத்தில் ஆசிரியர்களுக்காக ஒரு முகாமை அமைக்கப்போவதாகக் கூறினார். ரஷிய ஆசிரியர்கள் கம்பீரத்துடன் இருப்பதில்லை; அவர்களைக் கண்டறிய முடியவில்லை என அவர் குறிப்பிட்டார். கல்வி என்பது ஊதியம் பெறும் வேலை என்பதோடு ஆசிரியர்கள் நின்றுவிடுகிறார்கள். பணியாற்றும் ஊரின் வரலாறு, அந்த மக்களின் பண்பாடு போன்றவற்றைத் தெரிந்து கொள்ள ஆசிரியர்கள் முனைப்பு காட்டுவதில்லை என்பதெல்லாம் ஷெக்காவோவின் வருத்தங்கள். நம் வகுப்பறைகளில்தான் பேதங்களே தொடங்குகின்றன. அடிமை முறையை ஒழித்து ஆயிரம் ஆண்டுகளாகியும் தொலைக்காட்சிகள் ஒரே நாளில் அடிமை முறையை நமக்குக் கற்றுக் கொடுத்து விடுகின்றன. வீடுகளில் குழந்தைகளைப் பேசவே விடுவதில்லை; தொலைக்காட்சிகள்தான் பேசிக் கொண்டே இருக்கின்றன. நாம் பிரம்மாண்டங்களை நோக்கியே பார்க்கிறோம். அதனால், சிறிய சிறிய விஷயங்களை கண்டுகொள்வதில்லை. உண்மையில் சிறிய விஷயங்கள்தான், நமக்கு நிறைய கற்றுத் தருகின்றன. தன்னைவிட 5 மடங்கு அதிக எடை கொண்டவற்றை எறும்பு சுமக்கிறது. நாம் எறும்பைக் கண்டவுடன் நசுக்கிக் கொள்கிறோம். அதில் நாம் சுகம் கொள்கிறோம். ஒரு கல்லை எடுத்தால், அதை யார் மீதாவது வீசிப் பார்க்கத்தான் நாம் முனைகிறோம். அந்தக் கல் பெரிய மலையின் ஒரு பகுதி என்றுப் பார்ப்பதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக இந்த உலகை நரகமாக மாற்றி வருகிறோம். மனிதர்கள் தங்களிடமுள்ள சில சொற்களை, சிந்தனைகளை, செய்கைகளை மாற்றிக் கொள்ள முன்வர வேண்டும்' என்றார் எஸ். ராமகிருஷ்ணன். ஞாநி பயிலரங்கை ஒருங்கிணைத்த எழுத்தாளர் ஞாநி பேசியது: "ஒவ்வொருவரும் உடனடி இலக்கு, நீண்டகால இலக்கு மற்றும் தனிப்பட்ட இலக்கு, சமூகத்துக்கான இலக்கு என்றும் வகைப்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த இலக்குகள் நல்லவைகளாகவும், அன்பு சார்ந்தவையாகவும் இருக்க வேண்டும். பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் இடையேயுள்ள இருவேறு இலக்குகளை ஒரு புள்ளியில் இணைய வைக்க வேண்டியது முக்கியமானது. மாறுபட்ட கருத்து இருக்கலாம். ஆனால், அது மோதல் சார்ந்ததாக இருக்கக் கூடாது. அரசியல், சினிமா, கல்வி என எல்லாத் துறைகளிலும் பலவீனங்களையும், கோளாறுகளையும் பார்க்கிறோம். அடுத்த 50 ஆண்டுகளில் சமூகத்தை மாற்றியமைக்கும் இடத்தில் நீங்கள் இருக்கப் போகிறீர்கள்' என்றார் ஞாநி. தமிழ்ச்செல்வன் மற்றொரு ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் பேசியது: "24 மணி நேரமும் கற்றுக் கொள்பவர்கள் குழந்தைகள் மட்டும்தான். பள்ளிப் பருவத்தில் கற்றுக்கொள்ளும் எல்லா வழிகளையும் அடைத்துவிடுகிறோம். அந்த கதவுகள் இப்போதுதான் திறந்து விடப்பட்டிருக்கின்றன. இங்கு எல்லாமும் சிறப்பாக சொல்லித் தரப்பட்டிருக்கின்றன என்று சொல்ல முடியாது. ஆனால், கதவுகள் திறக்கப்பட வேண்டும் என்பதைச் சொல்லியிருக்கிறோம். இனி கற்றுக் கொள்ள வேண்டியதுதான்' என்றார் தமிழ்ச்செல்வன். 4 நாள்கள் நடைபெற்ற இந்தப் பயிலரங்கு குறித்து மாணவ, மாணவிகள் சார்பில் சிலர் பேசினர். அவர்கள் கூறியவை: "மாணவர், மாணவி என்ற பாகுபாடின்றிப் பழக வாய்ப்பு கிடைத்தது. "வெளிக்காற்று உள்ளே வரட்டும்' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தப் பயிலரங்கின் மூலம் சுத்தமான ஆக்ஸிஜனை சுவாசித்ததைப் போன்ற உணர்வைப் பெற்றோம். நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். எங்களாலும் முடியும் என்ற தன்னம்பிக்கையைப் பெற்றிருக்கிறோம்' என்றனர்.
0 comments: