இங்கிலாந்து அணி அசத்தல் வெற்றி
பார்படாஸ்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான "டுவென்டி-20 உலக கோப்பை "டுவென்டி-20, "சூப்பர்-8 போட்டியில், இங்கிலாந்து அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
மூன்றாவது "டுவென்டி-20 உலக கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது. இதன் "இ பிரிவு "சூப்பர்-8 போட்டியில் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்க அணிகள் மோதின. "டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் கோலிங்வுட், பேட்டிங் தேர்வு செய்தார்.
பீட்டர்சன் அபாரம்:
இங்கிலாந்து அணியின் லம்ப் (3), விரைவில் அவுட்டானார். பின் கீஸ்வெட்டர், பீட்டர்சன் இணைந்து ரன்குவிப்பில் ஈடுபட்டனர். ஸ்டைன் ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய பீட்டர்சன் அரைசதம் கடந்தார். இவர் 53 ரன்கள் எடுத்த நிலையில் போத்தாவின் சுழலில் சிக்கினார். அவுட்டானார். இங்கிலாந்து அணி 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது.
திடீர் சொதப்பல்:
டுமினி பந்தில் சிக்சர் அடித்த, கீஸ்வெட்டர் (41), இவரிடமே வீழ்ந்தார். பின் கோலிங்வுட் (14), ரைட் (0) நிலைக்கவில்லை. மார்கன் (21), பிரஸ்னன் (13) என அடுத்தடுத்து சொதப்ப, இங்கிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 168 ரன்கள் மட்டும் எடுத்தது. போத்தா, மார்னே மார்கல், லாங்கிவெல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
கைவிட்ட காலிஸ்:
எட்டி விடும் இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு இம்முறை காலிஸ் (11) கைவிட்டார். அதிரடி கிப்ஸ் 8 ரன்களில் திரும்பினார். நீண்டநேரம் தாக்குப்பிடித்த கேப்டன் ஸ்மித் 19 ரன்கள் எடுத்தார். ஆல்பி மார்கல், "டக் அவுட்டானார். பவுச்சரும் (9) ஏமாற்றினார்.
வீணான போராட்டம்:
ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த போதும், டுமினி, போத்தா இணைந்து போராடினர். டுமினி 39 ரன்களில் வெளியேற, தென் ஆப்ரிக்க அணியின் வெற்றி கனவு கலைந்தது. பின் ஸ்டைன் (5), போத்தா (12) என அவுட்டாக, தென் ஆப்ரிக்க அணி 19 ஓவரில் 129 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 39 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சைடு பாட்டம், சுவான் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக பீட்டர்சன் தேர்வு பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம், "சூப்பர்-8 சுற்றில், 4 புள்ளிகள் பெற்ற இங்கிலாந்து அணி, (ரன்ரேட் +1.176) அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
0 comments: