அனில் அம்பானி கோரிக்கை உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு
புது தில்லி, மே 7: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கிருஷ்ணா கோதாவரி ஆற்றுப் படுகையிலிருந்து எடுக்கும் எரிவாயுவை குறைந்த விலையில் சப்ளை செய்ய வேண்டும் என்ற அனில் அம்பானியின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தை ஏற்படுத்தியவர் அனில் அம்பானி. இவரது மறைவுக்குப் பிறகு மகன்கள் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி இடையே சொத்து விவகாரம் விஸ்வரூபமெடுத்தது. பின்னர் நடுநிலையாளர்கள் மற்றும் தாயார் கோகிலாபென்னின் தலையீட்டில் இவர்கள் நிறுவனங்களைப் பிரித்துக் கொண்டனர்.
இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மூத்த மகன் முகேஷ் அம்பானி வசம் உள்ளது. இந்நிறுவனம் கிருஷ்ணா கோதாவரி ஆற்றுப் படுகையில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டுள்ளது.
இந்நிறுவனத்திலிருந்து எடுக்கப்படும் எரிவாயுவை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நேச்சுரல் ரிசோர்சஸ் லிமிடெட் (ஆர்என்ஆர்எல்) மற்றும் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்துக்கு குறைந்த விலையில் அளிக்க வேண்டும் என்று அனில் அம்பானி வழக்கு தொடர்ந்தார். ஏற்கெனவே இது தொடர்பாக சகோதரர்களுக்கு இடையே முன்னர் ஒப்பந்தம் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் எரிவாயுவை அரசு நிர்ணயித்த விலைக்குத்தான் வழங்க முடியும் என்று முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கூறிவிட்டது.
10 லட்சம் கன அடி எரிவாயு (எம்எம்பிடியு) விலை 4.20 டாலர் என அரசு நிர்ணயித்தது. ஆனால் தங்களது நிறுவனத்துக்கு ஒரு எம்எம்பிடியு 2.34 டாலருக்கு அளிக்க வேண்டும் என்று அனில் அம்பானி தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.
இது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் ஆகியோரடங்கிய மூவர் பெஞ்ச் விசாரித்தது. நிறுவனங்களைப் பிரிப்பது தொடர்பான ஒப்பந்தம் 2005-ம் ஆண்டு ஜூன் மாதம் கையெழுத்தாகியுள்ளது. 17 ஆண்டுகளுக்கு எரிவாயு சப்ளை செய்வது தொடர்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் தற்போது கண்டறியப்பட்டுள்ள எண்ணெய் கிணற்றில் 11 ஆண்டுகளுக்குத்தான் எரிவாயு கிடைக்கும் என தெரிகிறது.
மேலும் இது தொடர்பாக குடும்ப அளவில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்க முடியாது. இதை நிறுவனங்களிடையிலான ஒப்பந்தமாகவும் கருத முடியாது என்று நீதிபதிகள் கூறினர்.
இயற்கை எரிவாயுவைப் பொறுத்தமட்டில் அரசுதான் சொந்தக்காரர். அதை எடுத்து விநியோகிக்கும் நிறுவனம்தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். எனவே இதை தன்னிச்சையாக விற்பனை செய்யும் உரிமை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு கிடையாது. இதற்கு அரசின் அனுமதியைப் பெற்றாக வேண்டும். அந்த வகையில் உற்பத்தி பகிர்வு தொடர்பாக அரசுக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மீறும் வகையில் உள்ளது ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்சஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம். இதை ஏற்க முடியாது. எனவே இரு நிறுவனங்களும் 6 வாரங்களுக்குள் கலந்து பேசி 8 வாரங்களுக்குள் மும்பை உயர் நீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
0 comments: