எழுச்சி பெறுமா இந்திய அணி? * இன்று வெஸ்ட் இண்டீசுடன் மோதல்
பார்படாஸ்: பார்படாசில் இன்று நடக்கும் "டுவென்டி-20' உலககோப்பை, "சூப்பர்-8' போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இந்திய அணி, இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.
வெஸ்ட் இண்டீசில் மூன்றாவது "டுவென்டி-20' உலககோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இன்று பார்படாசில் நடக்க உள்ள "சூப்பர்-8' சுற்றுப் போட்டியில், "எப்' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, வெஸ்ட் இண்டீசை எதிர்கொள்கிறது.
வெற்றி அவசியம்:
இப்போட்டியில் மோதும் இரு அணிகளும் தற்போது நெருக்கடியான நிலையில் உள்ளன. சூப்பர்-8 சுற்றில், தங்களது முதல் போட்டிகளில் இந்தியா, ஆஸ்திரேலியாவிடமும், வெஸ்ட் இண்டீஸ், இலங்கையிடம் படுதோல்வி அடைந்துள்ளன. அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமானால், இனி விளையாட உள்ள இரண்டு "சூப்பர்-8' சுற்றுப் போட்டிகளிலும், வெற்றி பெற வேண்டியது அவசியம். தோல்வி அடையும் அணி, அரையிறுதி வாய்ப்பை இழக்க நேரிடும்.
எழுச்சி தேவை:
இந்த முறை லீக் போட்டிகளில் அசத்திய இந்திய அணி, "சூப்பர்-8' சுற்றில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது. காம்பிர், யுவராஜ், முரளி விஜய், ரெய்னா, தோனி, யூசுப் பதான் என ஒட்டு மொத்த இந்திய பேட்ஸ்மேன்களும் சொதப்பினர். ரோகித் சர்மா மட்டும் ஆறுதல் அளித்தார். இந்திய அணியின் பவுலிங்கும் மோசமாக அமைந்தது. ரவிந்திர ஜடேஜாவின் சுழற் பந்து வீச்சு, பெரும் ஏமாற்றம் அளித்தது. இன்றைய போட்டியில் ஜடேஜாவை நீக்குவது தான், இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுக்கும். இவருக்குப் பதில் அறிமுக வீரர்களான வினய் குமார், உமேஷ் யாதவ் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கலாம். ஜாகிர் கான், நெஹ்ரா ஆகியோர் பெரிய அளவில் சோபிக்க தவறுகின்றனர். கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளரை இன்றைய போட்டியில் இடம் பெறச் செய்வது அணியின் பந்து வீச்சை பலப்படுத்தும்.
வெஸ்ட் இண்டீஸ் சோகம்:
தனது முதல் "சூப்பர்-8' சுற்றுப் போட்டியில், இலங்கை அணியிடம் தோல்வி அடைந்த சோகத்தில் உள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி. சொந்த மண்ணில் விளையாடுவதால், இன்றைய போட்டியில் இந்திய அணியை வீழ்த்த கடுமையாகப் போராடும். கெய்ல், சர்வான், சந்தர்பால், பிராவோ உள்ளிட்ட அனுபவ பேட்ஸ்மேன்கள் கைகொடுக்கலாம். அதிரடி வீரர் போலார்டு, சாதித்தால் வெற்றியை எட்ட வாய்ப்பு உள்ளது. டெய்லர், ரோக், சமி, பென் ஆகியோர் பந்து வீச்சில் பலம் சேர்க்கின்றனர்.
சர்வதேச "டுவென்டி-20' அரங்கில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே மோதியுள்ளன. கடந்த 2009 ம் ஆண்டு லண்டனில் நடந்த இப்போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
விழித்துக் கொள்வாரா விஜய்?
காயம் காரணமாக சேவக் இடம் பெறாத நிலையில், துவக்க வீரராக வாய்ப்பு பெற்ற தமிழக வீரர் முரளி விஜய், பெரிய அளவில் சோபிக்காதது பெரும் ஏமாற்றம் அளித்துள்ளது.
சமீபத்தில் நடந்த ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணி சார்பில் பங்கேற்ற இவர் 458 ரன்கள் குவித்து அசத்தினார். இதனால் தான் உலககோப்பை தொடரில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இந்த வாய்ப்பை வீணடித்து வருகிறார். இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 50 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இன்றைய முக்கிய போட்டியில் சாதிப்பாரா விஜய்?
ஆஸி.,-இலங்கை பலப்பரீட்சை
பார்படாசில் இன்று இரவு நடக்கும் மற்றொரு போட்டியில், குரூப் "எப்' பிரிவில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன. இரு அணிகளும் தங்களது முதல் சூப்பர்-8 சுற்றுப் போட்டியில் வெற்றியை எட்டி நல்ல பார்மில் உள்ளன. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ளும் என்பதால் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வார்னர் மிரட்டல்: வாட்சன், வார்னர் துவக்க ஜோடியின் அதிரடி ஆட்டம் ஆஸ்திரேலியாவின் ரன் குவிப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது. டேவிட், மைக்கேல் ஹசி சகோதர ஜோடியின் பொறுப்பான ஆட்டமும் அணிக்கு பக்கபலமாக உள்ளது. இவர்கள் தவிர, ஒயிட், கேப்டன் மைக்கேல் கிளார்க், ஹாடின் என ஆஸ்திரேலியாவின் பேட்டிங் படை, இலங்கை அணியை அச்சுறுத்துக்கிறது. நானஸ், டெய்ட், ஹாரிஸ் ஆகியோரின் வேகத்தில் இன்று இலங்கை அணி திணறுவது உறுதி.
ஜெயவர்தனா பலம்: இலங்கை அணியின் பலம் ஜெயவர்தனா தான். ஐ.பி.எல்., தொடரில் அசத்திய இவர், அதே பார்முடன் உலககோப்பையில் மிரட்டி வருகிறார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் சூப்பர்-8 போட்டியில் 98 ரன்கள் குவித்த இவர், இன்றும் அசத்தலாம். மலிங்காவின் துல்லியமான பந்து வீச்சு, ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. சங்ககரா, தில்ஷன், மாத்யூஸ், மெண்டிஸ் ஆகியோர் இலங்கை அணிக்கு நம்பிக்கை அளிக்கும் வீரர்களாக உள்ளனர்.
வேகத்தில் மிரட்டுவோம்: கெய்ல்
வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்களில் "ஷாட் பிட்ச்' பந்துகளை எதிர்கொள்வதில் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவின் பலவீனத்தை எங்களது பலமாக மாற்றிக் கொள்வோம் என்றார் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கெய்ல். இது குறித்து அவர் கூறுகையில்,"" இன்றைய போட்டியில், "ஷாட் பிட்ச்' பந்துகளை வீசி இந்திய அணியை மிரட்டுவோம். அதே நேரத்தில் பார்படாஸ் மைதானம் சிறியது என்பதால், கவனமாக பந்து வீசுவோம். இன்றைய போட்டியின் வெற்றி இரு அணிகளுக்கும் முக்கியம் என்பதால், தவறுகளை திருத்திக் கொண்டு சிறப்பாக செயல்படுவோம். இனி வரும் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது,'' என்றார்.
0 comments: