ஹைதராபாத்தில் சோயப் மாலிக் கிரிக்கெட் பயிற்சி எடுக்க எதிர்ப்பு
ஹைதராபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் தடை செய்யப்பட்டுள்ள சானியா மிர்ஸாவின் கணவர் சோயப் மாலிக், ஹைதராபாத்தில் கிரிக்கெட் பயிற்சி எடுக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சோயப் மாலிக், சானியா கல்யாணத்திற்கு முன்பும் பெரும் சர்ச்சை கிளம்பியது. இப்போதும் அது தொடர்கிறது.
தற்போது சானியாவுடன் ஹைதராபாத் வந்துள்ளார் சோயப். இதையடுத்து ஹைதராபாத் லால் பகதூர் ஸ்டேடியத்தில் அவர் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டார். அவருடன் மனைவி சானியா, மாமனார் இம்ரான் மிர்ஸா ஆகியோரும் வந்திருந்தனர்.
இதையடுத்து சோயப் மாலிக்கும், சானியா, இம்ரான் ஆகியோர் ஜிம்கானா கிளப்புக்கு சென்றனர். அங்கும் சோயப் பயிற்சி மேற்கொண்டார். சானியாவும் பிட்னஸ் பயிற்சிகளை செய்தார்.
அங்குதான் பிரச்சினை வெடித்தது. அங்கு வந்த சில உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் தடை செய்யப்பட்ட சோயப் எப்படி இங்கு பயிற்சி செய்யலாம் என்று கிளப் நிர்வாகிகளுடன் வாதிட்டனர். இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் சார்பில் தடை செய்யப்பட்ட வீரர்களையே இங்கு நுழையக் கூட அனுமதிப்பதில்லை. அப்படி இருக்கையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் தடை செய்யப்பட்ட ஒருவர் எப்படி இங்கு பயிற்சி பெறலாம் என்று போர்க்கொடி உயர்த்தினர்.
இதனால் அப்செட் ஆன சானியா, சோயப் மற்றும் தனது தந்தையுடன் அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டார்.
இந்த விவகாரம் குறித்து ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
0 comments: