Sunday, May 9, 2010

0

கட்டுரைகள்

தேசம் விலைபேசப்படுகிறதா?

உலகம் இன்று இந்தியாவைக் கூர்ந்து கவனிப்பதற்குக் காரணம் இருக்கிறது. உலகிலேயே மக்கள்தொகை மிகுந்த ஜனநாயக நாடு இதுதான். அத்துடன் இது விரைவில் மக்கள்தொகையில் முதல் இடத்தில் இருக்கும் சீனத்தையும் மிஞ்சிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.மக்கள்தொகை மிகுந்த நாட்டை வணிக உலகம் சந்தையாகப் பார்க்கிறது. அமெரிக்கா முதலிய ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகள், இந்தியாவைத் தங்கள் சொந்த சுயநலத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளத் துடிக்கிறது. தேசத்தைப் பற்றியோ, மக்களின் எதிர்காலத்தைப் பற்றியோ கவலையில்லாத இந்திய அரசு தங்கள் அரசியல் எதிர்காலத்தை மட்டுமே கணக்கிட்டுச் செயலாற்றுகிறது. "இது எங்குபோய் முடியுமோ?' என்று தேசப்பற்றுடைய அறிவாளிகள் திகைத்துப்போய் நிற்கின்றனர்.இந்தியா பொருளாதாரத்தில் வளர்ந்து கொண்டு இருக்கிறது என்றும், விரைவில் 9 புள்ளியை எட்டிவிடும் என்றும் பேசுகிறார்கள். சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் வந்துவிட்டால் கொடியேற்றி வைத்துவிட்டு, இந்தியாவில் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருந்தவர்கள் எல்லோரும் உலகச் செல்வந்தர்களாக உயர்ந்துவிட்டது போலவும், நாடு வல்லரசாக மாறி வருவதாகவும் ஆட்சியாளர்கள் சொல்லிச் சொல்லி மகிழ்ந்து போகிறார்கள். நமக்கும் கேட்பதற்குப் பெருமையாகத்தான் இருக்கிறது. ஆனால் உண்மை நிலை "இது பகல்கனவு' என்று உணர்த்தி விடுகிறதே!÷இந்நாட்டின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் இளைஞர்கள் என்பது இதற்கு இன்னொரு கூடுதல் சிறப்பாகும். ஆனால் இந்த மனிதவளத்தை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியவில்லையே! இங்கே உயர்கல்வி என்பது அமெரிக்கா முதலிய அன்னிய நாட்டுக்குச் சேவை செய்வதையே நோக்கமாகக் கொண்டது. இவர்களுக்குத் தாய்நாட்டுப் பற்று எங்கிருந்து வரும்?இந்நாட்டில் மண்ணும், மக்களும் பிரிக்க முடியாதவர்கள்; கல்வியும் அப்படித்தான். ஒரு தேசத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் வல்லமை கொண்டது. மக்களின் கலை இலக்கியப் பண்பாட்டை நிர்ணயிக்கக் கூடியது. இந்தியாவில் ஏற்பட்ட ஓர் அவசர காலத்தில் மாநிலப் பட்டியலிலிருந்த கல்வித்துறை மத்தியப் பட்டியலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.மத்திய அரசு இதைக் கையில் வைத்துக்கொண்டு நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டு இளைய தலைமுறையை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இப்போது புதிய அச்சுறுத்தல் மசோதா வடிவில் வந்திருக்கிறது."வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களின் கட்டுப்பாட்டுச் சட்ட மசோதா - 2010' என்ற புதிய மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதோடு நாடாளுமன்ற நடப்புக் கூட்டத் தொடரில் இம்மசோதாவைத் தாக்கல் செய்யவும் முடிவெடுத்துள்ளது.நமது நாட்டைப் பொறுத்தவரை கல்வி என்பது முன்பே முற்றிலும் வணிகமயமாகவே மாற்றப்பட்டு விட்டது. இதில் அன்னியக் கல்வி நிறுவனங்களும் போட்டியிடுமானால் கல்விப் பந்தயத்தின் முடிவு எப்படியிருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். இப்போதே ஆங்கில மோகத்தில் பண்பாட்டுப் பழக்கவழக்கச் சீரழிவிலே மிதக்கும் இளைய தலைமுறையால் இந்தியாவின் எதிர்காலத்தைப் பாழாக்கலாமா? இந்திய நாட்டின் எந்தச் சட்டத்தையும் அன்னியப் பல்கலைக்கழகங்கள் மதிக்கப் போவதில்லை. அதைப்பற்றி இந்த அரசு கவலைப்படப் போவதுமில்லை.இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நோபல் மற்றும் பத்மவிபூஷண் விருது பெற்ற வெங்கடராமன், இந்தியாவில் அன்னிய பல்கலைக்கழகங்கள் திறக்கப்படுவதற்கு வணிக நோக்கமே காரணம் என்று கூறியுள்ளார். இவைகளில் கேம்பிரிட்ஜ் போன்ற தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் வெளிநாடுகளில் பல்கலைக்கழகங்களை அமைப்பதில்லை என்றும், ஆனால் வேறு சில பல்கலைக்கழகங்கள் வெளிநாடுகளில் பல்கலைக்கழக வளாகங்களை அமைப்பது வணிக நோக்கத்தில்தான் என்றும் கூறியுள்ளார். இந்தச் சாட்சி போதாதா?இந்தியக் குடிமக்களை அன்னியர்கள் போலவும், அடிமைகளைப் போலவும் நடத்துவதும், அதேசமயம் அன்னியப் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பளித்து இந்தியாவின் கதவுகளை அகலத் திறந்து விடுவதும்தான் உலகமயக் கொள்கையாக இருக்கிறது. கடல்சார் மேலாண்மைச் சட்டத்தின்மூலம் மீனவ மக்கள் அவர்களது பாரம்பரிய கடற்பகுதியிலிருந்து வெளியேற்றப்படுவதுடன் அன்றாடம் அவர்கள் தொழில் செய்ய முடியாமல் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுகின்றனரே, இதுபற்றித் தமிழக அரசு பலமுறை கூறியும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லையே, இது ஏன்?வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு திமிங்கிலங்களின் பசியைப் போக்க கனிம வளங்களை வாரி இறைத்திட காட்டுப் பகுதியிலிருந்தும், மலைப்பகுதியிலிருந்தும் பழங்குடி மக்களை வெளியேற்றுவதும், "சிறப்புப் பொருளாதார மண்டலம்' என்ற பெயரால் இந்தியாவின் உயிர்நாடியான விவசாயப் பெருங்குடி மக்களை அவர்கள் பாரம்பரிய பூமியிலிருந்து பறித்துக் கொள்வதும், "இந்தியா ஏழை இந்திய மக்களுக்கல்ல' என்ற எண்ணத்தை இந்நாட்டுக் குடிமக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது."இந்தியா பாரம்பரிய விவசாய நாடு' என்ற எண்ணத்தைத் தகர்ப்பதற்கான திட்டங்களும், சட்டங்களும் அவசர கதியில் கொண்டு வரப்படுகின்றன. விவசாயத்தில் தனியார்மயத்தைப் புகுத்தவும், இத்துறையில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்கும் வகையிலும் இந்தியாவும், அமெரிக்காவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஒப்பந்தத்தால் நமது வாழ்வாதாரமான விவசாயம் வணிகமாக ஆக்கப்பட்டு பன்னாட்டு நிறுவனங்களின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் அபாயம் காத்திருக்கிறது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் மரபணு மாற்றுப் பயிர்களைப் பற்றி யாரும் கேள்விகூட எழுப்ப முடியாது.÷"இந்திய-அமெரிக்க விவசாய அறிவுசார் அமைப்பு' ஏற்படுத்தப்பட்டு, அந்த அமைப்பால் உருவாக்கப்பட்ட மரபணு மாற்றிய விதைகளை எதிர்த்துப் பிரசாரம் செய்தால் ஓராண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கும் பிரிவும் இச்சட்டத்தில் இடம்பெற்றுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள்கூட இதிலிருந்து கருத்து மாறுபடவோ, எதிர்க்கருத்துக் கூறவே முடியாதென்றால் மக்களாட்சிக்கும், சர்வாதிகாரத்துக்கும் வேறுபாடுதான் என்ன?மரபணு மாற்று தொழில்நுட்பம் மூலம் இந்திய விவசாயத்தை அழிக்க முயற்சி நடப்பதாகக் கனடா நாட்டு மரபணு விஞ்ஞானி சிவ்.எஸ். சோப்ரா கூறியுள்ளதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். உலகிலேயே மரபணு மாற்றம் செய்யப்பட்ட முதல் உணவுப் பயிரான கத்தரிக்காயை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் முயற்சி நடைபெற்று வருகிறது. மக்களின் கடுமையான எதிர்ப்பால் அதுவும் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எந்தநேரத்திலும் இது "விஸ்வரூபம்' எடுத்து வரலாம்.÷இதையெல்லாம் மிஞ்சுவது அமெரிக்காவுடன் இந்தியா செய்து கொள்ளப்பட்டுள்ள அணுசக்தி ஒப்பந்தம். கடந்த முறை மத்திய அரசைத் தாங்கிப் பிடித்திருந்த இடதுசாரிக் கட்சிகளும், எதிர்க்கட்சியான பாஜகவும் எதிர்த்தபோதும் ஆட்சியே கவிழும் நிலையிலும் இந்த ஒப்பந்தம் செய்து கொள்ள பிரதமர் துடித்தது ஏன்? "தேச நலனுக்காகவா இப்படிப்பட்ட முடிவு எடுக்கப்பட்டது?' என்ற கேள்வி எழுந்தது.÷இதன் தொடர்ச்சியாக அணுசக்தி ஒப்பந்தத்தின்படி இந்தியாவில் அமையும் அணுமின் நிலையங்களில் விபத்து நேரிட்டால் அந்த நிலையத்துடன் இணைந்து செயல்படும் அயல்நாட்டு நிறுவனம் அதிகப்படியாக 300 மில்லியன் டாலருக்கு மேல் இழப்பீடு தரவேண்டியது இல்லை என்று நிர்ணயிக்கும் மசோதா மக்களவையில் கடந்த மார்ச் 15 அன்று தாக்கல் செய்வதாக இருந்தது. ஆனால், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக் காரணமாகத் தாக்கல் செய்யப்படவில்லை.விபத்து எப்படி ஏற்பட்டாலும், யார் பொறுப்பாக இருந்தாலும் இந்தியர்களுக்குத் தரவேண்டிய இழப்பீடு இதற்குமேல் தரவேண்டாம் என்று அயல்நாட்டு நிறுவனங்களுக்குச் சாதகமாகவும், இந்தியர் நலனுக்குப் பாதகமாகவும் இவ்வளவு பகிரங்கமாகக் கொண்டுவரும் மசோதாவை இந்த வடிவில் அனுமதிக்க எதிர்க்கட்சிகள் மறுத்துவிட்டன.அன்னிய நிறுவனங்கள் இங்கு அணு உலைகளை அமைக்க அனுமதி அளிக்கத்தான் இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது என்று கூறுவது தவறானது என்றும், இப்போதைய நிலையில் அணுசக்தித் துறையில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் திட்டம் ஏதும் இல்லை என்றும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையமைச்சர் பிருதிவிராஜ் சவாண் கூறியுள்ளார். அப்படியானால், "இந்த மசோதாவுக்கான தேவை என்ன?' என்ற வினா எழுகிறது.÷இந்த மசோதாவின்படி அணுமின் நிலையங்களில் ஏற்படும் விபத்து எவ்வளவு பெரியதாக இருந்தபோதிலும் வெறும் 300 மில்லியன் டாலர் இழப்பீடு என்று வரையறை செய்திருப்பதை அனைவருமே எதிர்க்கின்றனர். இந்த இழப்பீடு தொகையில் அந்த அயல்நாட்டு நிறுவனம் 18 விழுக்காடு மட்டும் பொறுப்பேற்றுக் கொண்டால் போதுமானது; மீதம் 82 விழுக்காடு இந்திய அரசே பொறுப்பேற்கும் என்பது என்ன நியாயம்? இந்திய அரசின் நிலை இப்படித்தான் தொடர்கிறது.""உலகத்திலுள்ள உள்நாட்டு, வெளிநாட்டுப் பிரச்னைகளை நாம் இந்தியக் கண்கொண்டே பார்க்க வேண்டும். வல்லரசு நாடுகளுடன் நாம் கூட்டுச் சேர்வது சில நன்மைகளைப் பயக்கலாம். ஆனால், முடிவில் அதனால் கேடுதான் விளையும். இந்தியாவுக்கும், உலக அமைதிக்கும் அதனால் தீமையே உண்டாகும்...'' - இதுதான் முதல் பிரதமர் நேருவின் எச்சரிக்கை. இதனைக் காங்கிரஸ் கவனத்தில் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை.அன்று காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சி செய்தது. இன்று அதே காங்கிரஸ் கூட்டணியாக ஆட்சி செய்கிறது; காலப்போக்கில் அரசியலில் மாற்றம் ஏற்படுவது இயற்கைதான். ஆனால், நாட்டின் இறையாண்மையைப் பலி கொடுக்கலாமா? "உலகமயம்' என்ற பெயரால் தேசம் விலை பேசப்படுவதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

போலி பாஸ்போர்ட்டுகளால் பாழாகும் இளைஞர்கள்

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்ற சொல்லுக்கு ஏற்ப இன்றைய இளைஞர்களில் பலர் லட்சங்களைச் சம்பாதிப்பதற்காக வெளிநாடு செல்வதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். ஆனால், நம்நாட்டிலிருந்து சென்ற பிறகு அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு குறைவில்லை என்றே கூறலாம். இவர்களில் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களே அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர். பணம் சம்பாதிப்பதற்காக இளைஞர்கள் மட்டுமல்லாமல், நடுத்தர வயதினரும் கடல் கடந்து செல்வதைத்தான் பெரும்பாலும் விரும்புகின்றனர். குறிப்பாக, இந்த வழக்கம் கிராமங்களில் அதிகமாக உள்ளது. ஒருவரைப் பார்த்து மற்றவர்களும் புற்றீசல்போல நகை, சொத்துகளை அடமானம் வைத்துச் செல்வது இன்றும் கிராமங்களில் தொடர்கதையாகவே இருக்கிறது. மலேசியா, சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளில் தமிழர்களாலேயே தமிழர்கள் ஏமாற்றப்படும் நிலை இன்னும் நீடிக்கத்தான் செய்கிறது. பெரும்பாலானோர் வெளிநாடுகளில் கொத்தடிமைகளாகவே வாழும் நிலை உள்ளது. இதுஒருபுறமிருக்க, வெளிநாட்டு மோகத்தால் முறைகேடுகளில் ஈடுபட்டு போலீஸôரிடம் சிக்குவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. வெளிநாடு செல்லும் பெரும்பாலானவர்களுக்கு பாஸ்போர்ட், விசா எளிதில் கிடைக்காது. என்றாலும், வெளிநாட்டு மோகத்தால் தவறான வழியைப் பின்பற்றும் நிலைக்கு கிராமப்புற இளைஞர்கள் பலர் ஆளாகின்றனர். இவர்களிடம் ஆசை காட்டி சட்டத்துக்குப் புறம்பாக வெளிநாடு செல்வதற்கு மூளைச் சலவை செய்யும் இடைத்தரகர்கள் என்ற டிராவல்ஸ் ஏஜென்டுகள் எண்ணிக்கையும் இப்போது அதிகமாகிவிட்டன. டிராவல்ஸ் ஏஜென்டுகள் சொல்லும் வார்த்தைகளை நம்பி ஏராளமான இளைஞர்கள், நடுத்தர வயதினர் ஏமாற்றமடைகின்றனர். ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான ரூபாய்களைப் பெறும் டிராவல்ஸ் ஏஜென்டுகள் மற்றொருவரின் அசல் பாஸ்போர்ட்டில் உள்ள புகைப்படத்தைக் கிழித்துவிட்டு, அப்பாவி மக்களின் புகைப்படத்தை ஒட்டி, பாஸ்போர்ட்டாக கொடுக்கின்றனர். வேறு ஒருவரின் பெயரில் விண்ணப்பித்து சில தில்லுமுல்லுகளைச் செய்து பணம் வாங்கியவர்கள் பெயரில் பாஸ்போர்ட் பெற்றுக் கொடுத்துவிடுகின்றனர். இதை வாங்கிக் கொண்டு விமான நிலையத்துக்குச் செல்லும் நபர்கள் குடியேற்றப் பிரிவு காவலர்களின் சோதனையில் சிக்கிக் கொள்கின்றனர். இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, சிறைக்குள் தள்ளப்படுகின்றனர். கடந்த 2008-ம் ஆண்டு மட்டும் திருச்சி விமான நிலையத்தில் 51 பேர் சிக்கினர். கடந்த ஆண்டில் 70 பேர் கைதாகினர். நிகழாண்டில் ஏப்ரல் வரை 25 பேர் பிடிபட்டுள்ளனர்.இதேபோல, சென்னை, கோவை, மதுரை ஆகிய விமான நிலையங்களிலும் கைதாகும் அப்பாவி இளைஞர்கள் ஏராளம். போலி பாஸ்போர்ட் வழக்கில் சிக்குவோருக்குக் குறைந்தது இரண்டாண்டுகள் தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும், அவர்கள் சம்பாதிக்க நினைத்த அளவுக்கு பணத்தை நீதிமன்றத்துக்காகச் செலவிட வேண்டியுள்ளது. டிராவல்ஸ் நிறுவனங்கள் நம் நாட்டில் பெருகிய அளவுக்கு அதை நெறிமுறைப்படுத்துவதற்கான சட்டங்களோ அல்லது விதிமுறைகளோ இல்லை. இந்த மோசடியில் ஒரு கும்பலே இயங்கிக் கொண்டிருக்கிறது. விண்ணப்பம் செய்வதிலிருந்து, இருப்பிடச் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ், காவல் துறையின் சரிபார்த்தல் பணியும் ஆகியவை உரிய முறையில் மேற்கொள்ளப்படாததும் இதற்கு ஒரு காரணம். விண்ணப்பதாரர் மீது குற்ற வழக்குகள் ஏதும் இருக்கிறதா? என்பதை அறிவதற்காக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு பாஸ்போர்ட் அலுவலகம் மூலம் தகவல் அனுப்பப்படும். காவல் துறையினர் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் வீட்டுக்கே நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதும், அந்த நபரின் முழு விவரங்களையும் சேகரித்து, பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதே விதிமுறை. ஆனால், பல காவலர்கள் விண்ணப்பதாரரின் வீட்டைத் தேடிச் செல்வதில்லை. காவலர்கள் வீடு தேடி வருவதற்குள் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களே காவல் நிலையத்தை தேடிச் செல்கின்றனர். இவர்களிடம் சில "நூறுகளைப் பெறும்' காவலர்களும் உரிய விசாரணை மேற்கொள்ளாமல் விசாரணையை முடித்து விடுகின்றனர். விண்ணப்பதாரர்களைப் பற்றிய முழுமையான விசாரணை இல்லாமல், அரைகுறையாக முடிக்கப்பட்டு விடுகிறது. இதனால், விண்ணப்பதாரர்கள் தவறோ அல்லது முறைகேடோ செய்திருந்தால்கூட அது மறைக்கப்பட்டு விடுகிறது. எப்படி இருப்பினும் விதிமுறைக்கு மாறாக பாஸ்போர்ட் பெற்றவர்கள் விமான நிலையத்தில் குடியேற்றப் பிரிவு போலீஸôரிடம் சிக்கிக் கொள்கின்றனர். பாஸ்போர்ட் விசாரணைக்காக காவல் துறையில் தனிப் பிரிவை ஏற்படுத்தினால் இதுபோன்ற முறைகேடுகளை ஓரளவு தடுக்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

நெருங்கி வருகிறது தண்ணீர்ப் பஞ்சம்!

நீராபத்து, இன்னும் சில ஆண்டுகளில் ஏற்படப் போகும் விபரீத விபத்து என்றே கூறலாம். இப்போது கோடைக்காலம் தொடங்கியதும், மாநிலத்தில் தலைவிரித்தாடும் குடிநீர்ப் பிரச்னை, இன்னும் சில ஆண்டுகளில் கோடைக்காலம், மழைக்காலம் என்றில்லாமல் எப்போதும் இருக்கும்.அந்த அளவுக்கு நம்முடைய சீர்கெட்ட குடிநீர் மேலாண்மையாலும், அதிகரிக்கும் குடிநீர்த் தேவையாலும் நீரை அத்தியாவசியப் பொருளாகப் பார்ப்பது மறைந்து, மருந்துப் பொருளாகப் பார்க்கும் காலம் விரைவிலேயே ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.தமிழகம், குடிநீர் உள்பட அனைத்து நீர் தேவைக்கும் வடகிழக்கு மற்றும் தென்மேற்குப் பருவமழையை நம்பித்தான் உள்ளது. பருவமழை பெய்வதைப் பொறுத்துத்தான் நீர்நிலைகளும், ஆறுகளிலும் நீர் பெருகுகிறது. மாநிலத்தின் சராசரி மழையளவு 925 மி.மீ. ஆகும். ஆனால், இந்த மழை அளவைத் தமிழகம் எட்டிப்பிடித்து பல ஆண்டுகள் ஆகின்றன. அப்படியே இந்த மழை அளவை சில ஆண்டுகள் எட்டிப்பிடித்தாலும் அப்போது ஏதாவது ஒரு பகுதியில் அழிவு மழையாகப் பெய்து, இருக்கின்ற எல்லாவற்றையும் கடலுக்கு அடித்துச் சென்று விடுகிறது. மாநிலம் முழுவதும் ஒரே அளவில் பெய்யாமல், ஏதோ ஒரு பகுதியில் அழிவு மழையாகவும் இதர பகுதிகளில் லேசாகவும் பெய்து வருகிறது.இதனால் அண்மைக்காலமாக நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறது.நாட்டில் நீர்ப் பற்றாக்குறை உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று எனக் கூறி வரும் அரசு, நீர் மேலாண்மையில் இப்போதைய நிலைமை நீடிக்கும்பட்சத்தில் அடுத்த சில ஆண்டுகளில் வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டிய சூழ்நிலைக்குச் சென்றுவிடும். தமிழகத்துக்கு ஆண்டுக்கு 54,395 மில்லியன் கன மீட்டர் நீர் தேவையானதாக இருக்கிறது. இதே அளவில் தண்ணீர்த் தேவை அதிகரிக்கும்பட்சத்தில், 2050-ம் ஆண்டில் தமிழகத்தின் நீர்த் தேவை 57,725 மில்லியன் கன மீட்டராக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. இப்போதுள்ள தண்ணீர்த் தேவைக்கே, பக்கத்து மாநிலங்களோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் வேளையில், இன்னும் சுமார் 3 மில்லியன் கன மீட்டர் தேவைப்படும்பட்சத்தில் பெரும் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது.ஆறு, அணை, குளங்கள், ஏரி போன்ற நீர்நிலைகளைக் கொண்டு, இப்போது தண்ணீர் தாகத்தைத் தமிழகம் தணித்து வருகிறது. மாநிலத்தில் சுமார் 39,202 குளங்கள் உள்ளன. இதில் மழையையும், ஆறுகளின் பாசனத்தையும் சார்ந்து மட்டும் தோராயமாக 20,104 குளங்கள் உள்ளன. குறிப்பாக மழையை எதிர்பார்த்து 80 சதவிகித குளங்கள் உள்ளன. இக் குளங்கள் அனைத்தும் மன்னர் காலங்களில் வெட்டப்பட்டவை. போதிய பராமரிப்பின்மை, ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றால் இவற்றின் நீர்ப்பிடிப்புத் தன்மை பெருமளவு குறைந்துள்ளது. இப்போது குளங்களில் நீர்ப்பிடிப்புத் தன்மை 30 சதவிகிதத்தில் இருந்து 40 சதவிகிதம் வரை குறைந்துள்ளது ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.மேலும், இந்தக் குளங்கள் மூலம் பாசனம் பெறும் பரப்பளவும் 60 சதவிகிதமாகக் குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.இதன் காரணமாக குளத்தை நம்பியுள்ள குடிநீர் விநியோகமும், விவசாயமும் சூதாட்டத்தைவிட மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது. மாநிலத்தில் முக்கியமாக 34 நதிகள் உள்ளன. இவற்றைச் சார்ந்து சுமார் 86 துணை நதிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான நதிகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்தே உற்பத்தியாகி வருகின்றன. தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையிலேயே உற்பத்தியாகி, தமிழகக் கடல்பகுதியில் கலக்கும் ஒரே நதி தாமிரபரணிதான். இந்த நதியைத் தவிர பெரும்பாலான முக்கிய நதிகள் அனைத்தும் அண்டை மாநிலங்களில் உற்பத்தியாகி, தமிழகத்துக்குள் வரும் நதிகளாகவே இருக்கின்றன. இப்போதுள்ள அரசியல்வாதிகளாலும், அரசுகளாலும் இந் நதிகளின் நீர்வளத்தை முழுமையாக நம்ப முடியாத சூழ்நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதேவேளையில், மேற்குத் தொடர்ச்சி மலையில் இயற்கை வளம் குறைந்து வருவதால், நீர்வளமும் குறைந்து வருகிறது. ÷மேலும், மாநிலத்தில் உள்ள பிரதான அணைகள் மேடாகி வருவதால் அதிக அளவிலான நீரைத் தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிரதான அணைகளில் நடத்தப்பட்ட ஆய்வில், 8 அணைகளில் 30 சதவிகிதமும், 2 அணைகளில் 50 சதவிகிதமும், 4 அணைகளில் ஒரு சதவிகிதமும் நீரைத் தேக்கி வைக்கும் அளவு குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. அண்மைக்காலமாக அரசால் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட மணல் திருடர்களால், ஆற்று மணல் திருடுவது அதிகரித்துள்ளதால் மண்வளம் மட்டுமன்றி, நீர் வளமும் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆற்றின் போக்கையே மாற்றிவிடும் அளவுக்குப் பகிரங்கமாக நடைபெறும் இந்தத் திருட்டால், ஆறுகளில் நீர்வளம் வேகமாகக் குறைந்து வருகிறது. இவ்வாறு பல்வேறு காரணங்களால் வேகமாகக் குறைந்து வரும் நீர்வளத்தைப் பாதுகாக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்தாலும், அது கடலில் கரைத்த பெருங்காயமாகத்தான் உள்ளது. நீர்வளத்தைப் பெருக்காவிட்டாலும், இருக்கின்ற வளத்தையாவது காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மாசுபடாமல் பாதுகாக்கப்பட வேண்டும். மலைப் பகுதியில் வியாபார ரீதியான நடவடிக்கைகளைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். ஆறுகள் மூலம் நடைபெறும் நீர் வணிகத்துக்குத் தடை விதிக்க வேண்டும். நீர்நிலைகளில் பராமரிப்பு, பாதுகாப்பு மீது தனி அக்கறை எடுத்துச் செயல்பட வேண்டும். ஆறுகளில் மணல் அள்ளப்படுவதை உடனடியாகக் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், படிப்படியாகக் கட்டுப்படுத்த வேண்டும், நீர் நிலைகளை ஆக்கிரமிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்மேலாண்மையில் அரசு காலதாமதமோ, அலட்சியமோ செய்யும்பட்சத்தில், வரும்காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுவது தவிர்க்க முடியாது.

பாயும் ரூபாய்; தேயும் வருவாய்!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அண்மைக்காலமாக எட்டுக்கால் பாய்ச்சலில் உள்ளது. சென்ற 18 மாதங்களில், ஏப்ரல் 16 வரை, இதுவே அதிகபட்ச உயர்வு. டாலருக்கு ரூ. 44.32 என்ற நிலை உள்ளது. இன்னும் சொல்வதென்றால், கடந்த 13 மாதங்களில், ரூபாய் மதிப்பு 13 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்த அளவு டாலரின் மதிப்பு சரிந்துள்ளது.இது ஏற்றுமதியாளர்களை நேரடியாகப் பாதிக்கிறது. அவர்களுக்குக் கிடைக்கும் லாபம் குறைகிறது. எப்படி? நாம் ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு விலை நமக்கு டாலரில் வருகிறது. டாலர் மதிப்பு சரிந்தால், நமக்குக் குறைந்த அளவில்தானே ரூபாய் கிடைக்கும்?இரண்டு ஆண்டுகளாக சர்வதேச பொருளாதாரம் மந்தநிலையில் இருந்தது. அதனால் ஏற்றுமதி குறைந்தது. இப்போது பொருளாதாரம் மீட்சி அடைந்துள்ளது. ஏற்றுமதி ஆர்டர்கள் வருகின்றன. ஆனால், டாலர் மதிப்பு சரிவால் ஏற்றுமதி செய்பவர்களுக்கு லாபம் குறைந்துவிட்டது.இதில் வேடிக்கை என்னவெனில், இப்போதுகூட, இந்தியாவின் ஏற்றுமதியைவிட, இறக்குமதிதான் அதிகம். காரணம், நமது இறக்குமதியில் பெரும் பகுதி பெட்ரோலியப் பொருள்கள்தான். அப்படியானால், ரூபாயின் மதிப்பு அதிகரிப்பது எப்படி?இந்தியப் பங்குச் சந்தையில் அன்னிய முதலீடுகள் பெரிய அளவில் குவிகின்றன. இதுதான் டாலர் மதிப்பு குறைவதற்கும், ரூபாய் மதிப்பு உயர்வதற்கும் காரணம். 2009-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர்வரை 23.6 பில்லியன் டாலர்கள் (ஒரு பில்லியன் நூறு கோடி) இந்திய பங்குச் சந்தையில் வந்து குவிந்துள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். கடந்த ஓராண்டில் வெளியேறிய தொகை 11.3 பில்லியன் டாலர்கள் மட்டுமே.பொதுவாக, இதுபோன்ற தருணங்களில் பாரத ரிசர்வ் வங்கி தலையிட்டு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஓர் அளவுக்குமேல் உயராமல் பார்த்துக் கொள்வது வழக்கம். அதாவது, பணச்சந்தையிலிருந்து ரிசர்வ் வங்கி கணிசமான அளவு டாலரை கொள்முதல் செய்து, வீழ்ச்சி அடைந்த டாலரின் மதிப்பைத் தாங்கிப்பிடிப்பது ஒரு வழக்கமான செயல்பாடு. ஆனால், இந்த முறை ரிசர்வ் வங்கி அவ்வித செயல்பாட்டில் இதுவரை ஈடுபடவில்லை.பணவீக்கம், விலைவாசி அதிகரிப்பதால் மக்கள் அவதிப்படும் இந்த வேளையில், அதனைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ரிசர்வ் வங்கி முழுமையாக ஈடுபட்டுள்ளது.2010-ம் ஆண்டு தொடக்கம் முதல் பாரத ரிசர்வ் வங்கி எடுத்து வரும் நடவடிக்கைகளைக் கவனித்தால் இது தெரியும். ஜனவரி மாத கடைசியில், வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைக்க வேண்டிய ரொக்கக் கையிருப்புத் தொகை 5 சதவீதத்திலிருந்து 5.75 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இது சி.ஆர்.ஆர். (அதாவது கேஷ் ரிசர்வ் ரேஷியோ) எனப்படுகிறது. இதன்மூலம் ரூ. 36,000 கோடி ரூபாய் வங்கிகளிடமிருந்து பாரத ரிசர்வ் வங்கிக்குக் கைமாறியது. வங்கிகளிடம் உள்ள உபரிப் பணத்தை உறிஞ்சும் நடவடிக்கை இது.மார்ச் மாதம், ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு வழங்குகின்ற குறுகிய கால கடனுக்கானவட்டி விகிதம் (இதனை "ரெப்போ ரேட்' என்கிறார்கள்) 4.75 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்தப்பட்டது.அதேபோல், வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைக்கும் குறுகிய கால டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் (இது "ரிவர்ஸ் ரெப்போ ரேட்' என அழைக்கப்படுகிறது) 3.25 சதவீதத்திலிருந்து 3.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.மீண்டும் ஏப்ரல் 20-ல் பாரத ரிசர்வ் வங்கி தனது வருடாந்திர நிதிக் கொள்கையை அறிவித்துள்ளது. இதில் மேலே குறிப்பிட்ட சி.ஆர்.ஆர்., "ரெப்போ ரேட்' மற்றும் "ரிவர்ஸ் ரெப்போ ரேட்' ஆகிய மூன்று விகிதங்களும் மேலும் கால் சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.இவை அனைத்தும் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தி, பணவீக்க விகிதம் மற்றும் விலைவாசியைக் குறைக்க வழிவகுக்கும். ஆகவே இவை வரவேற்கப்பட வேண்டிய செயல்பாடுகள்.ஆனால், ரூபாய் நாணய மதிப்பு உயர்வதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அல்லது ஏற்றுமதியாளர்கள் துயர்துடைப்பதற்கான நடவடிக்கைகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. இது ஏற்றுமதியாளர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் என்று சொல்லத் தேவையில்லை.ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் மற்றும் நிறுவனங்கள், டாலர் சரிவு மற்றும் ரூபாய் மதிப்பு உயர்வால், இரண்டு வகைகளில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.ஒன்று, சீனாவில் நாணய மதிப்பு உயராமல், ஒரே நிலையில் பல்லாண்டுகளாக வைத்திருக்கிறார்கள். அந்த நாட்டில் இதை ஒரு வியாபார உத்தியாகக் கடைப்பிடிக்கிறார்கள். இந்தியாவைவிட குறைந்த விலையில் ஏற்றுமதி செய்வதாகக் கூறி இந்தியாவுக்குக் கிடைக்கக்கூடிய ஆர்டர்களைத் தட்டிச் செல்கிறார்கள்.இரண்டாவதாக, ஏற்றுமதி செய்த பொருள்களின் விலை டாலர்களாக வரும்போது, குறைந்த அளவிலான ரூபாய்தான் ஏற்றுமதியாளர்கள் கைக்குக் கிடைக்கிறது. சீனாவைப் பொறுத்தவரை, கடந்த 25 ஆண்டுகளுக்கும் அதிகமாக, அமெரிக்க டாலருக்கு நிகரான "யுயான்' மதிப்பு ஒரே நிலையில் ஸ்திரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.1990-களின் தொடக்கம் வரை சீனாவின் இந்தச் செயலை எந்த நாடும் ஆட்சேபிக்கவில்லை. காரணம், அந்த காலகட்டத்தில், ஓராண்டில் சீனாவின் ஏற்றுமதி அதிகமாக இருந்தால், அடுத்த ஆண்டில் சீனாவின் இறக்குமதி அதிகமாக இருக்கும். சீனாவின் ஏற்றுமதி இவ்வாறு மாறி, மாறி அதிகமாகவும், குறைவாகவும் இருந்து வந்ததால், இதனால் பிற நாடுகள் பாதிப்படையவில்லை. ஆனால், 1994-ம் ஆண்டுக்குப் பிறகு, சீனாவின் ஏற்றுமதி கிடு, கிடுவென உயர்ந்துவிட்டது.இந்நிலையில், நாணய மதிப்பீடு விஷயத்தில் சீனா மேற்கொண்டுள்ள உத்தியை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் எதிர்த்து வருகின்றன. ஒரே ஒரு வித்தியாசம்:சீனா தனது நாணயத்தை மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்று அமெரிக்கா வெளிப்படையாகவும், அழுத்தமாகவும் வலியுறுத்தி வருகிறது. ஆனால், ஐரோப்பிய நாடுகள் சீனாவிடம் ரகசியமாகவும், சற்று நீக்குப்போக்குடனும் வேண்டுகோள் விடுக்கின்றன. ஆனால், இந்தியாவோ, சீனாவிடம் இதுதொடர்பாக இன்னும் தனது எதிர்ப்பைப் பதிவு கூட செய்யவில்லை. இந்தியாவும் இதர நாடுகளைப்போல் இவ்விஷயத்தில் வெகுவாகப் பாதிக்கப்பட்ட நாடு என்பது என்னவோ உண்மை.இது ஒருபுறம் இருக்க, இந்தியாவிலிருந்து ஜவுளி, தோல் பொருள்கள், ஆபரணக் கற்கள், தங்க ஆபரணங்கள், கைவினைப் பொருள்கள், கலைப் பொருள்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொருள்களை ஏற்றுமதி செய்பவர்களையும் மற்றும் தகவல் தொழில்நுட்ப மென்பொருள் ஏற்றுமதி செய்பவர்களையும் இழப்பிலிருந்து காப்பது அவசியம் மட்டுமல்ல; அவசரமும் கூட.எனவே, பாரத ரிசர்வ் வங்கி பணவீக்க கட்டுப்பாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் அதேநேரம், ரூபாய் மதிப்பு தொடர்பாகவும் உரிய நடவடிக்கையை உடனே மேற்கொள்ள வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது.ரூபாயின் மதிப்பு ஏற்றம், டாலரின் மதிப்பு சரிவு, இந்தியாவில் ஏற்றுமதியை மட்டும் அல்லாமல், தொழில் வளர்ச்சியையும், முக்கியமாக வேலைவாய்ப்புகளையும் மோசமாகப் பாதிக்கும் என்பதை மனத்தில் கொள்வது அவசியம்.

புதிய சிக்கலில் மாணவர் கல்வி?
நடைபெற்று வரும் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதால், அந்தப் பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்புப்பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் தற்போது கணக்கெடுப்புப் பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற வருகின்றன. இதில் கணக்கெடுப்பாளர்களாகவும், மேற்பார்வையாளர்களாகவும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் ஏராளமானோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் ஜூலை 15-ம் தேதி வரை வீட்டுப்பட்டியல் கணக்கெடுப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும். அதன்பின் மக்கள்தொகையைக் கணக்கெடுக்க வேண்டும். இந்தப் பணி அடுத்த ஆண்டு வரை நீடிக்கிறது. இதில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதால், கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே மாணவர்களின் கல்வி பாதிப்புக்குள்ளாகிறது. கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்குப் பணி நேரத்தில் ஒரு மணி நேரம் கணக்கெடுக்கச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான ஆசிரியர்கள் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இதைப் பயன்படுத்தினால்தான் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளுக்குச் சென்று கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்ள முடியும். இதனால், காலை அல்லது பிற்பகல் நேரங்களில் முழுமையாகப் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படும். ஏற்கெனவே அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலமாக ஆசிரியர்களுக்குப் பள்ளி நாள்களில் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அந்த நாள்களில் மாணவர்களுக்குக் கற்பிக்க முடியாத நிலை உள்ளது. இந்தச் சூழலில் ஆசிரியர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியிலும் ஈடுபட்டால், மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்படும். இந்தக் கல்வி ஆண்டின் தொடக்கமான ஜூன் 1-ம் தேதி முதலே கணக்கெடுப்புப் பணியைத் தொடங்க வேண்டி உள்ளதால் மாணவர் சேர்க்கை, புதிய பாடங்கள் தொடக்கம் ஆகிய கல்விப் பணிகள் முடங்கும் நிலை உள்ளது. குறிப்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள் அதிக அளவில் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு வரப்பிரசாதமாக இந்த ஆண்டு சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்படுகிறது. கல்வி முக்கியத்துவம் வாய்ந்த இந்த வேளையில் ஆசிரியர்கள் பிறபணிகளுக்குச் சென்று விட்டால் ஆசிரியர்கள் இல்லாத வகுப்பறையில் தான் மாணவர்கள் காத்திருக்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏராளமான இளைஞர்கள் வேலைக்காகப் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.இவர்களில் பலருக்கு அரசு கருணைத் தொகையும் வழங்கி வருகிறது. இவர்களைக் கொண்டு மக்கள் கணக்கெடுப்புப் பணியை மேற்கொண்டால் அவர்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். மேலும் கல்வி பணிகளும் பாதிக்காது.அதிகாரிகள் ஏனோ இது பற்றி சிந்திக்காமல் உள்ளனர். ஏழை மாணவர்களின் கல்வியில் அலட்சியம் காட்டாமல் இந்தப் பிரச்னையில் உடனடியாக மாற்று ஏற்பாடுகளை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

அரசு எவ்வழியோ, மக்கள் அவ்வழியே

அதிகரித்து வரும் பொறுப்பற்ற நுகர்வுக் கலாசாரத்தின் அடையாளமாகத் தமிழகம் முழுவதும், ஏழை பணக்காரர், ஜாதி, மத வேறுபாடு இல்லாமல், பெரியவர்கள் முதல் பள்ளிச் சிறுவர் வரை எல்லோரும் பிளாஸ்டிக் பைகள், கப்புகள், தட்டுகள் போன்றவற்றை ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்து விடுகிறோம்.ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் பிளாஸ்டிக்குகளின் பல வகையான பாதிப்புகளைச் சரியான கோணத்தில் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.தமிழகம் முழுவதும் பல நீரோடைகளை இன்றைக்கு குட்டைகளாக மாற்றியதில் இவ்வகை பிளாஸ்டிக்குகள் முக்கிய பங்கை வகிக்கின்றன. மலேரியா, யானைக்கால், டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களுக்கும், இந்த நோய்களை உண்டாக்கும் கொசுக்களின் அசுர வளர்ச்சிக்கும் நீர்நிலைகள் மற்றும் சாக்கடைகளை பிளாஸ்டிக் அடைத்துக் கொள்வதற்கும் உள்ள நெருங்கிய தொடர்பை யாரும் கண்டு கொண்டதற்கான அறிகுறிகளே இல்லை.பிளாஸ்டிக் பொருள்கள் சாக்கடைகளை அடைத்துக் கொண்டு, கழிவுநீர் தெருவில் வழிந்தோடும் போது, அடைப்பை இயந்திரம் கொண்டு சரி செய்ய இயலாமல் போகிறது. இதனால், சக மனிதர்கள் மீண்டும் மீண்டும் பாதாளச்சாக்கடைகளுக்குள் இறங்க வேண்டிய நிலையைப் பற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.÷கோயில் அர்ச்சனைப் பொருள்கள், பிரசாதம் முதல், உணவு விடுதிகளில் பார்சல் வரை, கையேந்தி பவன், டாஸ்மாக் பார்கள் முதல் அசைவக்கடைகள் வரை, ஆபத்தான மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பேக்கேஜுகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை அத்தனையும் பின்னர் சாலைகளையும், குப்பை மேடுகளையும் வந்தடைகின்றன.நகரங்களில் துரத்தி விடப்பட்ட மாடுகளாய் இருந்தாலும் சரி, கிராமங்களில் மேய்ச்சலுக்குக் கொண்டு செல்லப்படும் கால்நடைகளாய் இருந்தாலும் சரி, எல்லா உயிர்களும் மீந்த உணவுகளுடன் சேர்ந்து தூக்கி எறியப்பட்ட ஆபத்தான பிளாஸ்டிக்குகளை விழுங்கி விட்டு இறக்க நேரிடுகிறது. கன்றுக்குட்டிகள் கூட பிளாஸ்டிக்கை விழுங்கியதால் இறப்பது தமிழக கிராமங்களில் தொடர்கதையாகி வருகிறது.கடந்த ஆண்டு சென்னை கால்நடை மருத்துவமனையில் இறந்து போன ஒரு மாட்டின் வயிற்றிலிருந்து, 45 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் வெளியே எடுக்கப்பட்டபோது, மருத்துவர்களே திகைத்துப் போனார்கள்.பிளாஸ்டிக் பைகளை கால்நடைகள் விழுங்குவதால், பசு மற்றும் எருமைப் பாலில் எவ்வகையான நச்சுப் பொருள்கள் கலக்கின்றன எனும் ஆராய்ச்சியை சமீபத்தில் துவக்கியுள்ளது கால்நடைப் பல்கலைக்கழகம்.÷கடல்வாழ் உயிரினங்களான மீன்கள், ஆமைகள் போன்றவையும் மிதக்கும் பிளாஸ்டிக் துகள்களை விழுங்கிவிடுகின்றன. இப்படி, மீன் உணவாய் இருந்தாலும், பசும்பால், மாமிசம் போன்றவையாய் இருந்தாலும் உணவுச் சங்கிலியிலேயே பிளாஸ்டிக்கின் நச்சு, வேகமாகக் கலந்து வருகிறது.÷இன்று பெரும்பாலான வீடுகளில், பல விதமான சாயங்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் குடங்களில்தான் குடிநீர் சேகரித்து வைக்கப்படுகிறது. இதுவும் மிகவும் ஆபத்து நிறைந்தது.÷கோடைக்காலங்களில் குடம் சிறிது சூடாகும் போது கூட கசிவு மூலம், ஆபத்தான உலோகம் கொண்ட வேதிப் பொருள்கள் குடிநீரில் கலக்க வாய்ப்புகள் உண்டு.÷இவை எல்லாவற்றையும் விட பரிதாபகரமானது, மறுசுழற்சி செய்யப்படும் சிறிய ஆலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நிலைதான். படிக்காத, பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள்தான் இவ்வகை ஆலைகளில் வேலை செய்கின்றனர்.÷சில நேரம், ஆலையின் நிறுவனரே மறுசுழற்சி வேலையிலும் ஈடுபட்டிருப்பார். இவர்கள் எல்லோரும் மறுசுழற்சியின் போது வெளிப்படும் நச்சுக்காற்றை தொடர்ந்து சுவாசித்துக் கொண்டு இருப்பவர்கள். நரம்புத்தளர்ச்சி, மலட்டுத்தன்மை, ஒவ்வாமை, சிறுநீரகப் பாதிப்பு, கல்லீரல் மற்றும் கணையப் பாதிப்பு, காசநோய், புற்றுநோய் போன்ற பல்வேறு உபாதைகளால் பாதிக்கப்படும் ஆபத்தான சூழ்நிலையில் தினமும் தவறாது வேலை செய்து வருகிறார்கள்.அதேபோல, பெரும்பாலான மக்களின் பொறுப்பற்ற நுகர்வுக் கலாசாரம் வெளிப்படுத்தும் பிளாஸ்டிக் போன்ற கழிவுகளைத் தெருக்களிலும், குப்பை மேடுகளிலும் சேகரித்து எடுத்து மறுசுழற்சிக்குக் கொடுப்பதற்காக என்று ஒரு சமூகத்தை ஒதுக்கி வைத்துள்ளோம். ÷இருபத்தோராம் நூற்றாண்டில் பெரும்பாலான தலித்துகளுக்கு ஒரு புதிய தொழிலைக் கொடுத்து, ஓர் உள்ஜாதியை உருவாக்கி வைத்துள்ளோம். நவீனமயமாக்கலில் தோன்றிய விபரீத வருணாசிரமத்தின் இன்றைய புதிய வெளிப்பாடுதான் குப்பை சேகரிக்கும் தொழிலாளர்கள்.÷நலிவுற்ற தாய்மார்கள் முதல் கஞ்சா நுகரும் சிறுவர்கள் வரை, சமூகம் வீசி எறிவதைச் சேகரித்து எடுத்து, வயிறு வளர்க்க வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டவர்கள் இவர்கள். குப்பை வளாகங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் தொடர்ந்து எரிக்கப்பட்டுவரும் நிலையில், அந்த வளாகங்களுக்கு அருகில் வசிப்போருக்கு, மற்றவர்களால் கற்பனை செய்து பார்க்க முடியாத வகையான சுகாதாரப் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.பெருங்குடி குப்பை வளாகத்துக்கு அருகில் வசிக்கும் தாய்மார்களின் தாய்ப்பாலில் கூட "டையாக்சின்' போன்ற நச்சு அதிகமாக இருந்ததை ஆராய்ச்சிகள் வெளிக் கொண்டுவந்தன.2002-ம் ஆண்டு மே மாதம் இவ்வகை பொருள்களைத் தடை செய்யும் மசோதா ஒன்று அன்றைய ஆளும் கட்சியால், தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்டது. பிளாஸ்டிக்குக்கு எதிராக பொதுக்கருத்தும் உருவானது.÷மசோதாவுக்கு ஆதரவாக, அன்றைய முதல்வர் ஜெயலலிதா ஒரு மணி நேரம் சட்டசபையில் பேசினார். ஆனால், பிளாஸ்டிக் நிறுவனங்கள் கொடுத்த அழுத்தத்தினால், அன்று மதியம் நிறைவேற வேண்டிய மசோதா திடீரென்று அரசால் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் 2003-ம் ஆண்டு, 60 மைக்ரான் வரையிலான பிளாஸ்டிக் பொருள்களைத் தடை செய்யும் மசோதா ஒன்று தயாரிக்கப்பட்டது. ஆனால், இன்றுவரை, இதனைப் பற்றிய நீண்ட மவுனமே, அரசின் பதிலாக உள்ளது.கடந்த ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பாக, இந்த மசோதாவைச் சட்டமாக்கும்படி தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களின் சங்கங்களின் மனுவையும் உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.கடந்த ஆண்டு தில்லி அரசு ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதித்தது. இதனை எதிர்த்து அங்குள்ள பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் முதலில் தில்லி உயர் நீதிமன்றத்திலும், சமீபத்தில் உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்தனர். இவ்வழக்குகளைத் தள்ளுபடி செய்த உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்கள், பிளாஸ்டிக் பொருள்களைத் தடை செய்ய வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தின.தில்லி மட்டுமல்லாது, சண்டீகர், இமாச்சலப்பிரதேசம், மேற்கு வங்கம், காஷ்மீர், மும்பை போன்ற பல மாநிலங்களிலும், நகரங்களிலும் பிளாஸ்டிக் பொருள்களின் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தமிழக அரசு இனியும் தாமதிக்காமல், நடப்பு சட்டசபைக் கூட்டத்தொடரிலேயே மேற்சொன்ன மசோதாவை விவாதத்துக்கு எடுத்துக் கொண்டு சட்டமாக்க வேண்டும்.÷இவ்வகைத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களுக்கு நஷ்ட ஈடோ, மானியமோ, வட்டியில்லாத கடன் வசதியோ அளித்து மாற்றுத் தொழில்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க முன்வர வேண்டும். இவ்விதமாக வேலை இழப்புகளைச் சரி செய்ய முடியும்.ஆக, தமிழகத்தில் பிளாஸ்டிக் தடைச் சட்டத்தை ஏற்படுத்தி தீவிரமாகச் செயல்படுத்தினால் தமிழக கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான சுய உதவிக்குழு பெண்களுக்கும், விவசாயிகளுக்கும் தொடர்ந்து வாழ்வாதாரத்தை உறுதி செய்ய முடியும்.அதேசமயத்தில் பிளாஸ்டிக் தடையினால் பாதிக்கப்படக்கூடிய தொழிலாளர்களையும் வேலையிழப்பிலிருந்தும், சுகாதாரச் சீர்கேட்டிலிருந்தும் பாதுகாக்க முடியும்.இத்தலைமுறைக்கு மட்டுமல்லாது, அடுத்தடுத்த தலைமுறைக்கும் தமிழ் மண்ணைப் பாதுகாப்பாக வைத்து விட்டுப் போக முடியும்.

கண்ணைவிற்றுச் சித்திரம் வாங்கும் கபில் சிபல்!


மத்திய அரசின் புதிய உயர்கல்விக் கொள்கையின் ஒரு முக்கியமான அம்சமாக வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவுக்கு வந்து தங்கள் கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் ஆரம்பிக்கலாம் என்ற வகையில் ஒரு சட்டம் உருவாகிறது. இதன் விளைவுகளைச் சிறிய அளவிலேனும் அரசு கருத்தில்கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதா என்ற சந்தேகம் நாட்டு நலனில் அக்கறை உள்ள பலருக்கும் ஏற்பட்டுள்ளது.இந்தப் புதிய சட்டத்தின்படி ஒரு வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் இந்தியாவில் தனது கிளையைத் தொடங்க, 1. குறைந்தபட்சம் ரூ. 50 கோடி முதலீட்டுத் தொகையை உறுதி செய்ய வேண்டும் 2. மத்திய அரசின் யுஜிசியின் ஒப்புதலுடன் கல்விக்கட்டணத்தை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். 3. இந்தக் கல்வி நிலையங்களில் கிடைக்கும் லாபத்தைத் தங்கள் நாட்டுக்குக் கொண்டு செல்ல முடியாது. கடைசியாக, இந்தக் கல்வி நிலையங்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கோ, பழங்குடியினருக்கோ மட்டுமன்றி எந்தவொரு பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு கிடையாது.மேலே கூறிய இந்த நான்கு விதிகளையும் கூர்ந்து நோக்கினால், நமது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் நம் நாட்டின் மிகச் சிறந்த கல்வி நிலையங்களாக உலகெங்கிலும் பாராட்டப்படும் ஐஐஎம், ஐஐடி, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயன்ஸ், ஏஐஐஎம் ஆகிய பல தரமான பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களைச் சத்தமில்லாமல் இழுத்து மூடும் நிலைமைக்குத் தள்ள, கங்கணம் கட்டிக் கொண்டுள்ளாரோ என்கிற சந்தேகம் நமக்கு உருவாகிறது. எப்படி?முதலாவதாக கல்விக்கட்டணத்தை யுஜிசியின் ஒப்புதலுடன்தான் நிர்ணயம் செய்ய வேண்டும் என்றிருக்கிறதே ஒழிய, கல்விக் கட்டணங்கள் ஓரளவுக்கு மேல் இருக்க முடியாது என்ற உச்ச வரம்பு இல்லாத நிலையில், இதுபோன்ற வெளிநாட்டுக் கல்வி நிலையங்கள் நம் நாட்டில் கல்லூரிகளைத் தொடங்கி, மிக அதிகமான கல்விக் கட்டணங்களை உருவாக்கி கொள்ளை லாபம் சம்பாதிப்பார்கள்.வெளிநாட்டினர்தான் மிகவும் தரமான கல்வியைப் போதிக்க முடியும் என நம்மில் பலர் எண்ணுகிறோம். வெள்ளைத்தோல் ஆசாமிகள், நுனிநாக்கில் நவீன ஆங்கில வார்த்தைகளை உச்சரிப்பது அறிவின் உச்சகட்டம் என நாம் எண்ணுவது, பல ஆண்டுகளாக ஆங்கிலேயர்களின் ஆட்சியிலும், இன்றுவரை நமது டி.வி.க்களில் நம்மவர்கள் காணும் ஆங்கில சினிமாக்களினாலும் நமது தேசிய உளவியலைப் பாதித்துள்ளது என்பது நடைமுறை.எனவே, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பல்கலைக்கழகங்களால் நடத்தப்படும் உயர்கல்வி நிலையங்களில் நமது நாட்டுப் பணக்கார மாணவர்களும், ஏகப்பட்ட வங்கிக் கடனைப் பெற்று, நடுத்தரக் குடும்பத்து மாணவர்களும் சேர்ந்துவிடுவார்கள். இதுபோன்ற அதிகக் கட்டண வசூல் கிடைக்கும் உபரிப் பணத்தைக் கொண்டு மிக அதிகமான சம்பளத்தைப் பேராசிரியர்களுக்கும் மற்றைய கல்லூரி அலுவலர்களுக்கும் அளித்து, இன்றைய தரமான உயர்கல்வி நிலையங்களான ஐஐஎம், ஐஐடி போன்றவற்றின் விரிவுரையாளர்களையும், பேராசிரியர்களையும் இந்தப் புதிய வெளிநாட்டு உயர்கல்வி நிலையங்கள் தங்களது நிறுவனங்களுக்கு இழுத்துக் கொண்டு விடுவார்கள். விளைவு, நமது உயர்கல்வி நிலையங்கள் ஸ்தம்பிக்கும் ஒரு சூழ்நிலை உருவாகும்.ஏற்கெனவே ஐஐடி மற்றும் ஐஐஎம் போன்ற இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் அரசு விதிக்கும் கட்டணக் கட்டுப்பாடு காரணமாகத் தங்கள் நிதித் தேவைகளை ஈடுசெய்ய முடியாமல் திணறுவது நம் எல்லோருக்கும் தெரியும். வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் வேலை செய்யும் இந்தியப் பேராசிரியர் ஒருவர், நம் தாய்நாட்டுக்குக் குடிபெயர்ந்து வரவேண்டும் எனவும், தங்கள் நாட்டு மாணவர்களுக்கு உயர்கல்வி போதிக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்தோடும் நமது நாட்டின் ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிலையங்களில் வேலைக்குச் சேர்ந்தபின், இங்கே பதினைந்து ஆண்டுகள் வேலை செய்த ஒரு பேராசிரியர் வாங்கும் சம்பளம், அமெரிக்காவில் 30 வயது இளம் ஆசிரியர், பணியில் சேர்ந்த முதலாவது ஆண்டு பெறும் சம்பளத்தில் பாதிதான் என்பதை ஒரு பத்திரிகைக்குப் பேட்டியாக சென்ற ஆண்டு அளித்தது நமது நினைவில் பசுமையாக உள்ளது.அடுத்து, வெளிநாட்டிலிருந்து இங்கே வந்து கல்வி நிலையங்களைத் தொடங்கி நடத்துபவர்கள், அந்தக் கல்வி நிலையங்களில் ஈட்டும் லாபத்தைத் தங்கள் நாட்டுக்குக் கொண்டு போக முடியாது எனும் விதி. இதன் காரணமாக, ஹார்வர்ட், ஆக்ஸ்ஃபோர்ட் போன்ற உலகப் புகழ்பெற்ற கல்வி நிலையங்கள் இங்கே வராது. காரணம், அவர்கள் எல்லோருமே சுயநிதி கல்வி நிலையங்கள் என்பதால் தங்கள் பல்கலைக்கழகங்களுக்குப் பணம் சம்பாதிக்கும் வழிமுறையில்தான் புதிய கல்விநிலையங்களைத் தொடங்குவார்கள்.ஆனால், மேலை நாடுகளின் இரண்டாம்தர பல்கலைக்கழகங்கள் பல, எல்லா விதிகளையும் மீறி இங்கேயிருந்து தாங்கள் சம்பாதிக்கும் அதிக லாபத்தை ஹவாலா போன்ற வழிமுறையில் தங்கள் நாட்டுக்குக் கொண்டு போக முடியும் என்றவகையில் செயல்படத் துணிவார்கள். அதாவது அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் நம் ஊரில் வியாபார நோக்கில் நடத்தப்படும் சாதாரணமான கல்லூரிகள் போன்றவை நிறைய உண்டு. நிறையப் பணத்தைக் கல்விக்கட்டணமாகச் செலுத்தி எளிதாக அவற்றில் பட்டம் பெற்று அந்த நாடுகளில் சாதாரண வேலையில் சேரும் மாணவர்கள் உண்டு. அதுபோன்ற சில பல்கலைக்கழகங்கள் மட்டுமே இங்கே வந்து கடை விரிக்கும்.இதுபோன்ற நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்து நமது நாட்டின் அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், அவர்களின் வாரிசுகள் புதிய கல்வி நிலையங்களை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் முத்திரையுடன் தொடங்குவார்கள். காரணம், அடிப்படைத் தேவையான ரூ. 50 கோடி முதலீட்டுப் பணமும், இதுமாதிரியான கல்வி நிலையங்கள் தொடங்கத் தேவையான நிலங்களை மாநில அரசுகள் குறைந்த விலையில் இக் கல்வி நிலையங்களுக்கு வழங்க மாநில அரசுகளின் தயவும், ஓர் ஏக்கருக்கு இவ்வளவு என்ற லஞ்சப்பணமும் உறுதி செய்யும்.தனியார் கல்வி நிலையங்கள் சிறந்த கட்டடங்களையும், லெட்டர் பேடுகளையும் வைத்துக்கொண்டு, ஏனைய எந்த அடிப்படை வசதிகளையும் செய்யாமல் சுயநிதிக் கல்லூரிகளையும், பல்கலைக்கழகங்களையும் பல ஆண்டுகள் நடத்தியதைக் கண்டுபிடித்து அவற்றின் அனுமதிகள் ரத்து செய்யப்படும் நேரம் இது. இந்தக் காலகட்டத்தில், புதிதாக வெளிநாட்டுச் சரக்கு என்ற போர்வையில் இதுபோன்ற கல்வி நிலையங்கள் உருவாக்கப்படுவது சரிதானா எனும் கேள்வி எழுகிறது.நல்லமுறையில் இயங்கும் இந்திய அரசுசார்ந்த அமைப்புகளில் வெளிநாட்டு, உள்நாட்டுத் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டபின் குட்டிச்சுவரானது அனுபவம் நமக்குத் தந்த பாடம். உதாரணமாக, ஐந்து ஆண்டுகளுக்கு முன் பிஎஸ்என்எல் எனப்படும் மத்திய அரசின் தொலைபேசி அமைப்பு உலகெங்கிலும் பாராட்டப்படும் வகையில் நம் நாட்டின் தொலைத்தொடர்புப் பணிகளைச் செய்து வந்தது. தனியார் தொலைபேசிகளை அனுமதித்தபின் இன்று மிகவும் மோசமான நிலைமைக்கு பிஎஸ்என்எல் தள்ளப்பட்டுவிட்டது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அமைச்சர்களுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் கையூட்டு வழங்கி காரியமாற்றிக் கொள்ளும் வகையில் அரசின் நிறுவனம் ஒன்று செயல்பட முடியாததுதான் இதற்குக் காரணம்.அதுபோலவே பத்து ஆண்டுகளுக்குமுன் ஓஎன்ஜிசி எனப்படும் மத்திய அரசின் எண்ணெய் நிறுவனம் மிகவும் தரமாக பெட்ரோல், டீசல் உற்பத்தியில் இருந்தது. பின் தனியார் நிறுவனங்களான ரிலையன்ஸ், எஸ்ஸôர் ஆகியவற்றுடன் போட்டியிட முடியாமல் இப்போது திணறுகிறது. ஏர் இந்தியாவும், இந்தியன் ஏர்லைன்ஸýம் நஷ்டப்பட்டுச் செயலிழக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டது, தனியார் விமான சர்வீஸ்கள் நம் நாட்டில் அனுமதிக்கப்பட்ட பின்னரே.இந்தியாவில் உயர் கல்வியில் ஈடுபட்டிருக்கும் 18,000 கல்லூரிகள், 500 பல்கலைக்கழகங்களை முன்னேற்றும் வகையில் அவற்றுக்கு அதிகப் பணத்தை ஒதுக்கி ஆசிரியர்களின் சம்பளத்தைக் கூட்டி சிறந்த ஆசிரியர்களை ஈர்த்து, விதிமுறைகளைக் கடுமையாக்கி, கல்வியின் தரத்தை உயர்த்துவதே சரியான நடைமுறை. அதைவிடுத்து அவர்கள் இப்போது இயங்கி வரும் தரத்தையும் பாதிக்கும் வகையில் தரமில்லாத வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கே வந்து கல்வி நிலையங்களைத் தொடங்க வழிசெய்வது சரியாகாது.1990-ம் ஆண்டில் நமது தேசிய வருமானமான ஜிடிபியில் 4 சதவிகிதமும், இக்காலத்தில் ஜிடிபியில் 3.5 சதவிகிதமும் உயர்கல்விக்குச் செலவிடப்படுகின்றன. ஆனால், இதே காலகட்டத்தில் கல்வி நிலையங்கள் பல்கிப் பெருகியுள்ளன. அப்படியென்றால் தனியார் கல்வி நிலையங்கள் பெருகி உயர்கல்வி ஒரு சரியான வியாபாரமாக இந்தியாவில் உருவெடுத்துள்ளது நிரூபணமாகிறது.÷நமது நாட்டின் உயர்கல்வி நிலையங்களின் செயல்பாட்டை ஆராய்ந்து, அவற்றின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப முன்னேற்ற நடவடிக்கைகளைத் தொடங்குவது அரசின் கடமையாகும்.நமது மத்திய அரசு அவசரக் கோலத்தில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை நம் நாட்டில் அனுமதிக்கும் முடிவை எடுக்காமல் இருக்க வேண்டும் என்பது உயர்கல்வியின் முன்னேற்றத்தில் சிரத்தையுள்ள பலரின் அவா! கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கிய கதையாக, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குப் பட்டுக் கம்பளம் விரித்து சிறப்பாகச் செயல்படும் நமது உயர்கல்வி நிறுவனங்களுக்கு மூடுவிழா நடத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அமைச்சர் கபில் சிபல், அடிப்படையில் ஒரு வழக்கறிஞர். கட்சிக்காரருக்கு ஏற்ற வாதத்தை முன்வைத்து வழக்கில் வெற்றிபெறுவது வழக்கறிஞர்களின் தொழில்தர்மம். அமைச்சரின் தொழில்தர்மம், தேசநலனைத் தொலைநோக்குப் பார்வையுடன் காப்பதுதானே தவிர வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு வக்காலத்து வாங்குவதும், வசதி செய்து கொடுப்பதும் அல்ல என்று யாராவது அவருக்கு உணர்த்தினால் தேவலாம்.

இருட்டுக் குகைக்குள் குருட்டுப் பூனை...

வாணிபம் செய்வதற்காக இந்தியா வந்த ஆங்கிலேயர்கள், இங்கிருந்த நூற்றுக்கணக்கான சமஸ்தானங்களையும் சிற்றரசுகளையும் தந்திரமாக வசப்படுத்தி, ஆதிக்கமாக ஆட்சி நடத்தியதை அகற்றி சாதனை புரிந்திருப்பதாகப் பெருமைப்படுகிறோம்.ஆனால், தற்போது அமெரிக்க ஆதிக்கத்துக்கு அவர்கள் விரிக்கும் வலையில் நமக்கு நாமே பெருமையுடன் சிக்கிக் கொள்கிற நிலை உண்டாகிக் கொண்டிருக்கிறது. "உலகமயமாக்கல்' என்ற ஒரு டாம்பீகக் கொள்கையை "உலகத்தோடு ஒட்ட ஒழுகல்' என்ற அடிப்படையில் ஓரளவு ஏற்பதில் தவறில்லை. இன்றைய விரைவான விஞ்ஞான வளர்ச்சிச்சூழலில் தேவையும்கூட.ஆயினும், "கண்ணை விற்றுச் சித்திரம் வாங்குவதுபோல' முழுமையாக அதற்கு உள்படுவது முன்னிலும் கீழான அடிமை நிலையை நாமே ஏற்றுக் கொள்வதாகிவிடும். இருட்டுக் குகைக்குள் உழலும் குருட்டுப்பூனைகளாக ஆகிவிட வேண்டியிருக்கும்.ஏற்கெனவே, நமது பொருளாதாரக் கொள்கையை அமெரிக்கா நிர்ணயிக்கத் தொடங்கிவிட்டது.நமது பாரம்பரிய விவசாயப் பொருள்களின் சத்துகளுக்கு அமெரிக்கா பெயர் சூட்டி, அந்தப் பொருள்களின் ""உலகளாவிய காப்புரிமை'' எனும் பெயரில் தனதாக்கிக் கொள்ள முயற்சித்துவிட்டது.÷பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் பயிரிடப்பட்டு இன்றளவும் உள்ள கத்தரிக்காய், வெண்டைக்காய் போன்ற காய்கறிகளுக்கு மரபணு மாற்றம் என்ற பெயரில் தீங்குமிக்கதாகப் பயிரிடச் செய்வதுடன், இந்திய விவசாய பூமியையே பாழ்படுத்தும் திட்டத்துக்கு இணங்கும் நிர்பந்த நிலைமை நேரிட்டுக் கொண்டிருக்கிறது.அணுசக்திக் கொள்கையில் அமெரிக்காவுக்கு இந்தியா நிபந்தனைகள் விதிப்பதற்கு மாறாக, அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்கும் நிலை உருவாகி வருகிறது.இந்தியாவில் அயல்நாட்டு மின்நிலையங்களில் விபத்து ஏற்பட்டால் அதற்கான நஷ்டஈடுக்கு உச்சவரம்பாக ரூ. 2,142.85 கோடி நிர்ணயித்து, அதில் ரூ. 1,642 கோடியை இந்திய அரசே செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுவதைச் சம்மதிக்கும் நிலை வந்துள்ளது.இவையெல்லாம் வெளியே தெரியவந்துள்ள கட்டிகள், புண்களே! ஆனால், உள்ளுக்குள் அழுகி, புரையோடிப் போயுள்ளவை எவ்வளவோ!இந்நிலையில் இந்தியாவுக்குள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் தொடங்குவதற்கும் ஒப்புதல் அளித்துள்ளது மத்திய அமைச்சரவை. இந்தத் திட்டம் மசோதாவாகி அமலாகுமானால், வெளிநாட்டினர் நேரிடையாகக் கல்வி நிறுவனங்களை எட்டு மாதத்துக்குள் தொடங்கிவிடலாம்.ஏற்கெனவே, இந்தியப் பண்பாடு, பாரம்பரியம், சீலம் மற்றும் கலைகள் போன்ற உலகளாவிய கண்ணோட்டம் எனும் அடிப்படையில் சீர்குலைந்து விட்டதுடன், இந்தியப் பாதுகாப்பு என்பதே ஐயத்துக்கு உரியதாகவும் அச்சத்துக்கு ஆள்பட்டதாகவும் உள்ளது.÷ரோம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது வரலாறு. அதுபோல், இந்தியாவில் தற்போது தொலைக்காட்சி நாடகங்களிலும் நடனங்களிலும் மக்கள் தமது சிந்தனையை மறந்து திரிவதே நிகழ்கிறது. போர் மூலம் ஆக்கிரமிப்பு செய்வது முற்காலத்தில் இருந்த ஆதிக்க மனோபாவம். பின்னர், வணிகம் மற்றும் தானம் மூலம் ஆக்கிரமிப்பு செய்வது என்று உருவானது.தற்போது நலம் விளைவிக்கும் நட்புநாடு போல் ஊடுருவியும், மொழி கலைகளை நாசப்படுத்தியும், ஆட்சியாளர்களை வசப்படுத்தி நிர்பந்தம் ஏற்படுத்தியும் அடிமைப்படுத்தும் புதிய போர்க்கலையை அமெரிக்கா தொடங்கியுள்ளது.இந்தியா சுதந்திரம் பெற்றபோது, இருபது பல்கலைக்கழகங்களும், நானூற்று இருபது கல்லூரிகளுமாக இருந்த நிலையில், அறுபது ஆண்டுகளில் தற்போது முன்னூறு பல்கலைக்கழகங்களும் ஆறாயிரம் கல்லூரிகளுமாக வளர்ந்துவிட்டது.÷இந்தியப் பல்கலைக்கழகங்களில் படித்த பல லட்சம்பேர் உலகின் பல நாடுகளிலும் அனைத்துத் துறைகளிலும் உயர்ந்த பொறுப்பு வகிக்கின்றனர்.÷இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கும் மாணவர்கள் ஒன்றரை லட்சம் இருந்தாலும், வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்து படிக்கும் மாணவர்களும் மிக அதிகமே.சென்ற ஆண்டில் நிகழ்ந்த உலகப் பொருளாதார நெருக்கடியில் விபத்தில் அமெரிக்கா முதலிய நாடுகள் கடும் பாதிப்பு அடைந்திருந்தாலும், இந்தியாவுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை. காரணம் - இந்தியாவில் குடும்பக் கட்டமைப்பு, சீரான வியாபார அடித்தளம், வணிக நாணயம், தொழில்நேர்மை போன்ற பாரம்பரியங்கள் பெருமளவு கெட்டுப்போகாமல் இருந்ததுதான்.நமது அரசியல் சுதந்திரம் என்ற தேரைச் செலுத்தும் லகானை அமெரிக்கர்களிடம் அளிக்கத்தான் வேண்டுமா?""வெள்ளையனை வெளியேற்றப் பீரங்கிகள் தேவையில்லை; கைராட்டினமே போதும்'' என்று திடமாக ஒலித்த காந்திஜியின் உருவத்தைக் கரன்சியில் பொறித்துவிட்டு, அமெரிக்க ஆதிக்கத்துக்கு அடிபணியத்தான் வேண்டுமா?கார்கில் போர் நடந்த வேளையில், தினமணி முன்னாள் ஆசிரியர் ஏ.என். சிவராமனிடம் பாகிஸ்தானின் அடாத செய்கை பற்றிப் பலரும் வருத்தம் தெரிவித்தபோது, அவர், ""ஆண்டவனே! பாகிஸ்தானுக்கு நல்ல புத்தி புகட்டுவாயாக... என்று அனைவரும் வேண்டிக் கொள்வோமாக'' என்று கேட்டுக்கொண்டார்.""இந்தியத்துவத்தை உலகுக்கே உணர்த்தி வழிகாட்ட வேண்டும்'' என்ற விவேகானந்தரின் வீர கர்ஜனையை மறந்தும் அயலக மோகத்தில் அந்நியரின் எடுபிடியாகி, அடிமையாகிற நிலையில் இருந்தும், அரசாங்கமும் தேசமும் காக்கப்பட வேண்டும் என்று மக்கள் மனப்பூர்வமாகப் பிரார்த்திக்க வேண்டியதுதான்.

0 comments:

downloads

  • Love Records: - *W*e believe that every day is a *Valentine's Day* because someone somewhere is falling in love and that day is going to be the most important day in his/h...
    14 years ago
  • காதலிக்கக் கற்று கொள் ! - இத்தனை வருடமாய் கற்றுக் கொண்ட என் வாழ்க்கை ஒற்றை நொடியில் முடியும் முன்... நீ காதலிக்கக் கற்று கொள் !
    14 years ago

Total Pageviews

Twitter Updates

Meet The Author

Get In Touch

Powered by Blogger.

Blog Archive